இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன ராஜினாமா! நாடாளுமன்றத்தை கலைக்கிறார் ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க!
கொழும்பு: இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன தமது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இலங்கை ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்பதற்கு சற்று முன்னர் தமது ராஜினாமா கடிதத்தை ரணில் விக்கிரமசிங்கேவுக்கு அனுப்பி இருந்தார் தினேஷ் குணவர்த்தன. இதனையடுத்து இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவைப் பிறப்பிக்க இருக்கிறார் புதிய ஜனாதிபதி அனுர குமார் திசநாயக்க.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ஜேவிபி தலைவர் அனுர குமார திசநாயக்க கடும் போட்டிக்கு நடுவே வெற்றி பெற்றார். இன்று காலை இலங்கையின் 9-வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க பதவியேற்றார். முன்னதாக இலங்கை பிரதமர் பதவியில் இருந்து தினேஷ் குணவர்த்தன ராஜினாமா செய்தார். இதனையடுத்து இலங்கை அமைச்சரவையும் கலைக்கப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் பிராசாரத்தின் போது தாம் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற உடனே நாடாளுமன்றத்தைக் கலைத்து பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அனுர குமார திசநாயக்க வாக்குறுதி அளித்திருந்தார். தற்போது பிரதமர் ராஜினாமா மற்றும் அமைச்சரவை கலைப்பைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தரவை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க எந்த நேரத்திலும் பிறப்பிக்கக் கூடும். இதனைத் தொடர்ந்து இலங்கையில் நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு பொதுத் தேர்தல் நடைபெறும்.
இதனிடையே இனி வரும் எந்தத் தேர்தலிலும் தாம் போட்டியிடப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் மகன் பெரும் தோல்வியைத் தழுவியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications