எல்.டி.டி.இ. உடன் தொடர்பு இல்லை- புத்தர் சிலைகளை பாதுகாப்போம்- இலங்கைக்கு தாலிபான்கள் நட்புக்கரம்!
கொழும்பு: தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் தங்களுக்கும் எப்போதும் தொடர்பு இருந்தது இல்லை; இனி நாங்கள் பெளத்த மத சின்னங்களைப் பாதுகாப்போம்; இலங்கை எங்களையும் பயங்கரவாதிகளாகப் பார்க்க கூடாது என்று தாலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷகீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனையடுத்து 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் தலையெடுத்திருக்கின்றனர்.
தற்போது ஆப்கானிஸ்தனைன் 34 மாகாணங்களையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது தாலிபான்கள் இயக்கம். தலைநகர் காபூலும் தாலிபான்கள் வசமாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் புதிய ஆட்சியை தாலிபான்கள் அமைக்க இருக்கின்றனர்.

ஆப்கானில் இந்தியா
இதனிடையே தாலிபான்கள் தலைமையிலான ஆப்கானிஸ்தானுக்கு பாகிஸ்தான், சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவும் கூட தாலிபான்கள் தொடர்பாக மென்மையான போக்கை வெளிப்படுத்துகிறது. துருக்கியும் தாலிபான்களுக்கு ஆதரவு அளிக்கும் மனநிலையில் இருக்கிறது. தாலிபான்களுக்கான இந்த ஆதரவு கரம் நீள்வது இந்தியாவுக்கு கடும் சவாலானதாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தானின் அத்தனை மாகாணங்களிலும் பெரும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வந்துள்ளது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள ஈரானின் சப்பார் துறைமுகத்தை சீரமைத்தது, ஆப்கானிஸ்தான் மாகாணங்களை இணைக்கும் ரயில் திட்டங்களை செயல்படுத்தியது, ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தையே கட்டி தந்தது என எண்ணற்ற திட்டங்கள் இந்த பட்டியலில் உண்டு.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு இல்லை
இப்போது இந்தியாவுக்கு எதிரான சீனாவும் பாகிஸ்தானும் தாலிபான்களுடன் கை கோர்க்கின்றன. இந்த நிலையில் தாலிபான்கள் இலங்கையையும் தங்களுக்கான நட்பு நாடாக்குவதில் படுமுனைப்பாக இருக்கின்றன. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து வெளிவரும் டெய்லி மிர்ரர் ஆங்கில நாளேட்டுக்கு தாலிபான்களின் முதன்மை செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷகீன் பேட்டி அளித்துள்ளார். தாலிபான்களில் ஊடகங்களால் தொடர்பு கொள்ளக் கூடியவராக இருப்பவர் சுஹைல் ஷகீன் மட்டும்தான். ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தாலிபான்களின் வெளி உலக தொடர்பு முகமாக இருப்பவர் சுஹைல் ஷகீன். டெய்லி மிர்ரர் நாளேட்டுக்கு சுஹைல் ஷகீன் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: தாலிபான்கள் இயக்கம் ஒரு பயங்கரவாத இயக்கம் அல்ல. அப்படி மேற்குலக நாடுகள் அவதூறு பிரசாரம் செய்கின்றன. தாலிபான்கள் எந்த ஒரு நாட்டின் ஆதரவும் பெறாத தனித்த விடுதலை போராட்ட அமைப்பு. இலங்கையில் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் எங்களுக்கு எப்போதும் தொடர்பு இருந்ததே இல்லை. அன்னிய ஆக்கிரமிப்புக்கு எதிராக எங்கள் தாய்நிலத்தை மீட்க 20 ஆண்டுகள் யுத்தம் செய்துள்ளோம். தாலிபான்களின் புதிய ஆட்சியில் பெளத்த மத சின்னங்கள் சேதப்படுத்தமாட்டாது என உறுதி அளிக்கிறோம். இலங்கை எப்படி தங்களை அன்னிய சக்திகளிடம் இருந்து விடுவித்துக் கொள்ள சுதந்திரப் போராட்டம் நடத்தியதோ அதைப் போலத்தான் நாங்களும் சுதந்திரத்துக்காக யுத்தம் நடத்தினோம். எங்களை இலங்கை அரசு புரிந்து கொள்ள வேண்டும் என்று சுஹைல் ஷகீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாலிபான்களுக்கு இலங்கை ஆதரவு?
இலங்கையைப் பொறுத்தவரை அது ஏற்கனவே சீனாவின் பிடியில் இருக்கிறது. சீனாவுக்காக தனி ஒரு சுயாட்சி பிரதேசத்தையே இலங்கை தேசத்தில் உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. பாகிஸ்தானுக்கும் எப்போது நட்பு நாடாகவே இலங்கை இருந்து வருகிறது. இந்தியாவிடம் ஒரு பக்கம் நட்பு நாடு என கூறிக் கொண்டு உதவிகளைப் பெற்றுக் கொள்வதும் நெருக்கடியான தருணங்களில் இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதும் இலங்கையில் தொடர் போக்கு. இப்போது தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தை சீனாவும் பாகிஸ்தானும் ஆதரித்திருக்கின்றன. இந்த துணிச்சலில் இலங்கைக்கும் நட்புக்கரம் நீட்டி இருக்கிறது தாலிபான்கள். நிச்சயம் இலங்கையும் இந்தியாவைப் பற்றி கவலைப்படாமல் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவிக்கவே அதிக வாய்ப்புகள் இருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

தாலிபான்கள் பாடம் கற்றனரா?
தாலிபான்களின் இலங்கை தொடர்பான இந்த நிலைப்பாடு குறித்து திமுகவின் முதன்மை செய்தித் தொடர்பாளரும் மூத்த அரசியல் பார்வையாளருமான கே.எஸ். ராதாகிருஷ்ணன் சமூக வலைதளப் பக்கங்களில், புலிகளுடன் தொடர்பில்லை என தலிபான் கூறுவது ஒரு ஒருநாள் செய்தி. அவ்வளவுதான். தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஆப்கன் மக்களுக்கு உரிமை இருக்கிறது. கடந்த பல பத்தாண்டுகளாக முதலில் அன்றைய சோவியத், பின்னர் இன்றைய அமெரிக்கா என்ற இரண்டு வல்லரசுகளின் விளையாட்டு திடலாக ஆப்கன் ஆகியது. தலிபான், முஹாஹிஜிதீன்களின் நிர்மாணத்திற்கே அமெரிக்கர் தான் பிள்ளையார்-சுழி போட்டனர். ஆனால், இடைக்காலத்தில் தலிபான்களின் ஆட்சி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை. அனைத்துலகம் ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமை பட்டயத்தை மிகவும் ஆவேசமாக அவர்கள் மீறினார்கள். அனைத்துமே மேற்கத்திய ஊடக அவப்பிரசாரம் என்று அவர்கள் இன்று பூசி மெழுக முடியாது. எனினும் இன்று காலம் அவர்களுக்கு பாடம் படிப்பித்து இருக்கும் என நம்புவோம்.
Recommended Video

இப்போது சீனாவின் விளையாட்டு?
வல்லாதிக்க நோக்கங்களுக்கு வெளியே தம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க அப்பாவி ஆப்கன் மக்களுக்கு இருக்கின்ற உரிமையை, முதலில் ஆப்கன் ஆட்சியாளர்கள்தான், அவர்கள் எவராக இருந்தாலும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது. சமூக நீதி, பெண் உரிமை,சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செய்வதற்குமான ஆப்கன் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஆப்கன் மக்களுக்கு, இது "நம்ம ஆட்சி" என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும். நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று, கடந்த 20 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கன் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்த கூடாது. இல்லா விட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது. ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம்.

இனியும் வேண்டாம் ரத்த ஆறு
அப்பாவி ஆப்கன் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது. "புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை" என்று இன்று தலிபான் பேச்சாளர் கூறுவது, இலங்கையில் ஒரு "ஒருநாள் செய்தி". கடந்த இடைக்கால தலிபான் ஆட்சியில், "பாமியன்" உலக பெளத்த மரபுரிமை சின்னங்கள் குண்டால் தகர்க்கப்பட்டமை உண்மைதானே..! இதுபோன்ற ஆவேச முட்டாள்தனங்களை செய்யாமல் ஆப்கன் மக்களின் உடனடி தேவையான "அமைதி-நிம்மதி" யை பெற்றுத்தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்த தலிபான்கள் முன்னுரிமை வழங்க வேண்டும் என பதிவிட்டிருக்கிறார்.












Click it and Unblock the Notifications