அவமதிப்பு வழக்கில் சிறை! மன்னிப்பு கேட்ட 8 ஐஏஎஸ்களுக்கு விசித்திர தண்டனை ! ஆந்திர உயர்நீதிமன்றம்
அமராவதி: ஆந்திராவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு 2 வார சிறை தண்டனை அளித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து அவர்கள் மன்னிப்பு கோரியதால் அடுத்த ஒரு ஆண்டுக்கு மாதம் ஒருநாள் சமூக நலத்துறையின் விடுதியில் சேவை செய்ய வேண்டும் எனவும், ஒருநாள் செலவை ஏற்கவும் அதிரடியாக உத்தரவிட்டது.
ஆந்திர மாநிலத்தில் அரசு பள்ளிகளின் வளாகங்கள் உள்பட பிற அரசு நிலங்களில் கிராம மற்றும் வார்டு செயலகங்கள் கட்டப்பட்டன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர உயர் நீதிமன்றம் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதன்மீது விசாரணை நடைபெற்று வந்தது.

நீதிமன்றம் உத்தரவு
இறுதியில், அரசு பள்ளி வளாகம் உள்பட பிற அரசு நிலங்களில் கிராம மற்றும் வார்டு செயலகங்கள் கட்டக்கூடாது. கட்டப்பட்டுள்ள கட்டிடங்களையும் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை ஐஏஎஸ் அதிகாரிகள் முறையாக பின்பற்றவில்லை. இதனால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

8 ஐஏஎஸ்களுக்கு சிறை
இதில் ஐஏஎஸ் அதிகாரிகளான கோபால கிருஷ்ணா திரிவேதி, புடிதி ராஜசேகர், விஜய குமார், சியாமளா ராவ், ஸ்ரீலட்சுமி, கிரிஜா சங்கர், வி சின்ன வீரபத்ருது, எம்எம் நாயக் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தன. விசாரணை இன்று முடிவடைந்தது. விசாரணையின்போது நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த தவறியவர்களை நீதிமன்றம் கடுமையாக கடிந்து கொண்டது. இதையடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் தலா 2 வாரம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை தண்டனை நிறுத்தம்
இதையடுத்து ஐஏஎஸ் அதிகாரிகள் சார்பில் தீர்ப்பை நிறைவேற்ற தவறியதற்கு மன்னிப்பு கோரப்பட்டது. இதையடுத்து அவர்களுக்கான சிறை தண்டனையை நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. இதனால் ஐஏஎஸ் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்த நிலையில் அவர்களுக்கு வேறு வகையில் தண்டனை அளிக்கப்பட்டது.

தண்டனை என்ன
அதன்படி 8 ஐஏஎஸ் அதிகாரிகளும் அடுத்த ஒரு ஆண்டுக்கு மாதம் ஒரு முறை சமூக நலத்துறை விடுதிக்கு சென்று சேவை செய்ய வேண்டும் எனவும், மாணவர்களின் ஒருநாள் உணவு செலவை ஏற்க வேண்டும் எனவும், நீதிமன்றத்தின் ஒரு நாள் செலவு தொகையை செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications