கடலூரில் 3 பேர் எரித்து கொலை! பார்மட் செய்யப்பட்ட செல்போன்கள்! விசாரணையில் முக்கிய தடயம்
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் காராமணிக்குப்பத்தில் ஐடி ஊழியர், தனது தாய், மகனுடன் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து போலீஸார் விசாரணையில் சில பகீர் தகவல்கள் கிடைத்துள்ளன.
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுதன்குமார் (40). இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இவர் 15 நாட்கள் ஹைதராபாத்திலும் மீதி 15 நாட்கள் வீட்டிலும் பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி நிஷாந்த் என்ற 10 வயதில் மகன் இருந்தார். இந்த நிலையில் சுதன்குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். அவர்களது 10 வயது மகன் நிஷாந்த், சுதன்குமாருடன் வசித்து வந்தார்.
சுதன்குமார் ஹைதராபாத் செல்லும் நேரத்தில் மகனை தனது தாய், தந்தையுடன் தங்க வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுதன்குமாரின் தந்தை மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து சுதன்குமார், தனது தாய் கமலேஸ்வரியுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் இவர்களது வீடு வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருப்பதாகவும் அங்கிருந்து சடலங்கள் எரியும் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் போலீஸாருக்கு புகார் அளித்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெளிப்பக்கம் பூட்டப்பட்டிருந்த வீட்டை போலீஸார் உடைத்து பார்த்தபோது கமலேஸ்வரி, வீட்டின் வரவேற்பறையில் வெட்டி கொலை செய்யப்பட்டிருந்தார். அது போல் அங்கிருந்த இரு வேறு அறைகளில் சுதன் குமாரும் நிஷாந்தும் வெட்டி கொல்லப்பட்டு தீவைத்து எரிக்கப்பட்டிருந்த நிலையில் இருந்தனர்.
வீட்டில் நகைப் பணம் ஏதும் கொள்ளை அடிக்கப்படவில்லை. கமலேஸ்வரியின் உடலில் இருந்த நகைகளும் அப்படியேதான் இருந்தன. தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இந்த 3 பேரையும் மர்மகும்பல் வெள்ளிக்கிழமை அன்றே வெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த நிலையில் இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸுக்கு தகவல் ஏதும் கிடைக்காத நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு மீண்டும் வந்த அவர்களின் உடல் மீது துணிகளை போட்டு தீவைத்திருக்கலாம் என தடயவியல் நிபுணர்கள் தெரிவித்தனர். வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் கைப்பற்றி ஆராய்ந்த போது அவற்றை யாரோ மர்மநபர்கள் பார்மாட் செய்து அதில் இருந்த தகவல்களை அழித்துவிட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு போலீஸார் தகவல் கொடுத்து அந்த எண்களுக்கு யார் போன் செய்தனர், எவ்வளவு நேரம் பேசினர் போன்ற விவரங்களை எல்லாம் விசாரணை நடத்தி வருகிறார்கள். சுதன்குமாரின் முதல் மனைவி டெல்லி, இவர் திருமணமான 6 மாதங்களில் பிரிந்து சென்றுவிட்டார். இதையடுத்து அஞ்சும் சுல்தான் என்ற பெண்ணை காதலித்து சுதன்குமார் திருமணம் செய்து கொண்டார்.
அவர்களுக்கு பிறந்த குழந்தைதான் நிஷாந்த். இந்த நிலையில் அஞ்சும் சுல்தானும் சில ஆண்டுகளுக்கு முன்பு கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர் குறித்த தகவல்களையும் போலீஸார் விசாரிக்கிறார்கள். இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மர்ம கார் ஒன்று அந்த பகுதிக்கு வந்து சென்றது அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. இதை வைத்து போலீஸார் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications