இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்? கொலைகளை முதல்வர் கண்டும் காணாமல் இருக்கலாமா? அண்ணாமலை ஆவேசம்!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் இன்று பள்ளி மாணவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், "முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்புளியங்குடி கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவர் ஜீவா. இவர் விருதாச்சலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே ஊரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் ஒப்பந்த அடிப்படையில் மின்வாரியத்தில் வேலை செய்து வருகிறார். இன்று காலை 8 மணிக்கு ஜீவா பள்ளிக்கு செல்ல பேருந்து நிலையத்தில் காத்திருந்தபோது அங்கு வந்த ஆனந்த், ஜீவாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர், ஆனந்த், ஜீவாவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் ஜீவா ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்படிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஜீவாவை குத்திப் படுகொலை செய்துவிட்டு தலைமறைவான ஆனந்தை தேடி வருகின்றனர். காலையில் பள்ளி செல்ல காத்திருந்த மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள மேல் புளியங்குடி என்ற கிராமத்தை சேர்ந்த ஜீவா என்ற 17 வயது மாணவர், பேருந்து நிறுத்தத்தில் வைத்து, கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, கொலையாளிகளும், குற்றவாளிகளும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர். கொலை என்பது தினசரி வாடிக்கையாகிவிட்டது.
சட்டம் ஒழுங்கு எனது நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின். சட்டம் ஒழுங்கு செல்லும் பாதை மிகுந்த கவலைக்குரியதாக இருக்கிறது. ஆனால், சமூக வலைத்தளங்களில் எதிர்க்கருத்து வைப்பவர்களைக் கைது செய்ய முனைப்பு காட்டும் முதலமைச்சர், கொலை போன்ற கடும் குற்றச் சம்பவங்களைக் கண்டும் காணாமல் இருந்து வருகிறார். முதலமைச்சரின் கவனம் சட்டம் ஒழுங்கை நோக்கித் திரும்ப, இன்னும் எத்தனை உயிர்ப்பலிகள் வேண்டும்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார் அண்ணாமலை.












Click it and Unblock the Notifications