சனாதனத்தை தூக்கி பிடிக்கிறார்.. ஆளுநர் ரவிக்கு கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் கடலூரில் கைது!
கடலூர்: சனாதனத்தை உயர்த்தி பிடிக்கும் வகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்பட்டு வருவதாகக் கூறி, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காட்டுமன்னார்கோவில் அருகே கறுப்புக்கொடி காட்ட முயன்ற நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ம.ஆதனூர் கிராமத்தில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெறுகிறது. இன்று சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதற்காக நேற்று இரவு கடலூர் வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியுள்ளார். ஆளுநருக்கு பல்கலைக்கழக விருந்தினர் விடுதியில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் ராம. கதிரேசன் உள்ளிட்டோர் பூங்கொத்து அளித்து வரவேற்றனர்.

இந்நிலையில், இன்று ஆதனூரில் நந்தனார் குருபூஜை விழாவுக்கு அங்கிருந்து கிளம்பினார் ஆளுந ரவி. குருபூஜை விழா முடிந்த பிறகு பூணூல் அணியும் விழா நடைபெறுகிறது. அதிலும் ஆளுநர் ரவி கலந்து கொள்கிறார். இந்நிலையில் நந்தனார் குருபூஜை விழாவில் சனாதனத்தை உயர்த்திப் பிடிப்பதற்காகவே ஆளுநர் ரவி வந்திருக்கிறார் எனக் கூறி, ஆளுநர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
"ஆளுநர் திரும்பி போக வேண்டும்" , "சனாதனத்தை தூக்கி பிடிப்பதற்காகவே ஆளுநர் செயல்படுகிறார்; நந்தனார் குருபூஜையில் பிரிவினைவாதத்தை கொண்டு வருவதற்காக பூணூல் அணியும் விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் ஆளுநர் திரும்பிச் செல்ல வேண்டும்" என முழக்கமிட்டபடி அவர் வரும் வழியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றுதிரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் வருகையின்போது போராட்டங்கள் நடைபெறும் என்பதால் கடலூர் மாவட்ட எஸ்.பி ராஜாராம் தலைமையில் 700-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடலூர் மாவட்டத்திற்கு வந்திருக்கும் ஆளுநருக்கு எதிர்ப்பு தெரிவித்து, கறுப்புக்கொடி காட்ட முயன்ற இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வலியுறுத்தி மதிமுக கையெழுத்து இயக்கம் நடத்தி, அதனை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்பு கொடி காட்ட மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சியினர் முயன்று, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications