காவிரி: கர்நாடகாவுக்கு துணை ராணுவத்தை அனுப்புங்க- தமிழ்நாட்டில் அக் 8-ல் 'பெரிய சம்பவம்'.. சீமான்
கடலூர்: காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழ்நாட்டு உரிமைக்காக அக்டோபர் 8-ந் தேதி மிகப் பெரிய பேரணி ஒன்றை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எச்சரித்துள்ளார்.
காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை அக்டோபர் 15-ந் தேதி திறக்க வேண்டும் என்பது காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு. ஆனால் கர்நாடகா இதனை ஏற்க மறுத்துவிட்டது.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த கர்நாடகா முதல்வர் சித்தராமையா, காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க முடியாது என்பது மாநில அரசின் நிலைப்பாடு. இதனால் மாநில அரசு கலைக்கப்படுமா? மாநில அணைகளை ராணுவம் கையகப்படுத்துமா? என்பது தொடர்பாக ஆலோசனை நடத்தி இருக்கிறோம். காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிட முடியாது என்கிற மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்வோம் என கூறியுள்ளார்.
கர்நாடகா போராட்டங்கள்: கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு காவிரி நீரை தரக் கூடாது என ஏற்கனவே மண்டியா பந்த், பெங்களூர், கர்நாடகா பந்த் போராட்டங்கள் நடந்தன. வரும் அக்டோபர் 5-ந் தேதி கேஆர்எஸ் சலோ என்கிற கிருஷ்ணராஜ சாகர் அணை முற்றுகைப் போராட்டத்தை நடத்தப் போவதாக கன்னட சலுவாளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் போராட்டம்: மேலும் கர்நாடகா போராட்டங்களின் போது தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவப் படம் அவமரியாதை செய்யப்பட்டது. இது தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. காவிரி நதிநீர் உரிமையை வலியுறுத்தி தமிழ்நாட்டிலும் காவிரி டெல்டாவில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் செப்டம்பர் 30-ந் தேதி தமிழ்நாடு ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் நடத்தினார். இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சியினர் போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களின் போது கர்நாடகா பேருந்துகள் சிறைபிடிக்கப்பட்டன.
கர்நாடகா பகை நாடா?: இத்னைத் தொடர்ந்து வரும் அக்டோபர் 8-ந் தேதி மிகப் பெரிய பேரணியை நடத்தப் போவதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் கூறுகையில், இந்தியா ஒரே நாடு- ஒரே ரேஷன் கார்டு- ஒரே தேர்தல்- ஒரே வரி என்கிறீர்கள். கன்னடர்கள் பாரத மாதாவின் பிள்ளைகள் எனில் நாங்கள் யார்? தண்ணீர் கேட்டால் அடித்துவிரட்டுகிற இடம் எனக்கு பகைநாடுதான். என் வாகனத்தை எல்லையோடு நிறுத்திவிடுவார்கள் எனில் பக்கத்து மாநிலமா? பகை நாடா? அப்புறம் எப்படி தேசப்பற்று, இறையாண்மை, தேச ஒற்றுமை இருக்க முடியும்?
துணை ராணுவத்தை அனுப்புங்க: தேசப்பற்று, தேச ஒற்றுமை பேசுகிற மேலே ஆட்சி செய்கிற மக்கள் கர்நாடகாவுக்கு துணை ராணுவத்தை அனுப்பி எங்கள் தமிழ் மக்களைப் பாதுகாக்க வேண்டும். காவிரி அணைகளை துணை ராணுவம் கையகப்படுத்தி தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை விநியோகிக்க வேண்டும். அப்போதுதான் இது என் நாடு, எனக்கு உரியதைப் பெற்றுத் தரும்; என் உயிரைப் பாதுகாக்கும் என்கிற நம்பிக்கை வரும்.
அக். 8-ல் பெரிய பேரணி: காவிரி நீர் உன்னுடைய சொத்து என்றால் நெய்வேலி மின்சாரம் மட்டும் எப்படி இந்திய சொத்தாக இருக்க முடியும்? உன் நீர்வளம் உனக்கு என்றால் என் நிலவளம் என்னுடைய சொத்துதானே.. காவிரி நதிநீர் பிரச்சனைக்கு நாங்கள் போராடுகிறோம். போராடிக் கொண்டிருக்கிறோம். அக்டோபர் 8-ந் தேதி பெரிய பேரணி ஒன்றை நடத்தப் போகிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications