தம்பி என் அக்கவுண்ட்டில் 6000 ரூபாய் இருக்கு..வாட்ச் வாங்கிக்கோ.. தற்கொலை கடிதத்தில் மாணவி உருக்கம்
கடலூர்: கடலூரில் மகளிர் கல்லூரி கழிவறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கடலூர் செம்மண்டலம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மகளிர் கலைக் கல்லூரி உள்ளது. இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் 2 வகுப்புகள் நடைபெறுகின்றன.
இந்த கல்லூரியில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகிறார்கள். இன்று காலை வழக்கம் போல் கல்லூரிக்கு மாணவிகள் வந்தனர்.

கழிப்பறை
அப்போது அங்குள்ள கழிப்பறைக்கு மாணவிகள் சென்ற போது அங்கு ஒரு மாணவி துப்பட்டாவால் தூக்கிட்டு சடலமாக கிடந்தார். இதை பார்த்ததும் மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு கல்லூரி நிர்வாகத்திற்கு தெரிவித்தனர். இதனால் பேராசிரியர்களும் திரண்டனர். இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

பிரேத பரிசோதனை
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த மாணவியின் பெயர் தனலட்சுமி (19). பிகாம் முதலாமாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது. இவர் விழுப்புரம் அருகே உள்ள சின்னபாபு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த நாகலிங்கம் என்பவரின் மகள்.

விடுதியில் தங்கி படித்த கல்லூரி மாணவி
விடுதியில் தங்கி கல்லூரியில் படித்து வந்தார். இவர் எழுதியதாக ஒரு கடிதம் கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது: தம்பி சத்தி நல்லா படி. அப்பா, அம்மாவை பாத்துக்கோ. யாரையும் நம்பாதீங்க. இது போலியான உலகம். நான் தேர்வில் தோல்வி அடைந்துவிடுவேனோ என பயமாக இருக்கு. எனது அக்கவுண்டில் ரூ 6 ஆயிரம் இருக்கு. அதில் வாட்ச் வாங்கிகோடா.

அப்பா அம்மாவை எதிர்த்து பேசாதே
அப்பா, அம்மாவை எதிர்த்து பேசக் கூடாது. இதை படித்துவிட்டு லெட்டரை கிழித்து போட்டுவிடு என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. கல்லூரி மாணவி தனலட்சுமி எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications