என்எல்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் போராட்டம்.. கடலூரில் பரபரப்பு
கடலூர்: பணி நிரந்தரம் உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 6 நாட்களாக என்.எல்.சி. ஜீவா தொழிற்சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று தலைமை அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியேறாதபடி குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணிக்காக மேல் வளையமாதேவி பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2-வது சுரங்கத்தை விரிவாக்கம் செய்வதற்காக வளையமாதேவி உள்ளிட்ட பகுதியில் புதிய பரவனாறுக்கு மாற்றுப்பாதை அமைக்கும் பணியை கடந்த 26-ந்தேதி என்.எல்.சி. நிர்வாகம் தொடங்கியது. விளைநிலத்தில் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் ராட்சத பொக்லைன் எந்திரங்கள் மூலம் அழிக்கப்பட்டு பரவனாறுக்கு மாற்றுப்பாதை வெட்டும் பணி நடந்தது. இத்ற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின.

என்.எல்.சி நிர்வாகத்தை கண்டித்து நெய்வேலியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற என்.எல்.சி. அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதனை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் கற்களை வீசியதில் 20 போலீசார் காயமடைந்தனர். இதனால், கடலூர் மாவட்டத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.
என்.எல்.சி நிலம் கையகப்படுத்துவதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசும், என்.எல்.சி நிர்வாகம் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் என்.எல்.சி அலுவலகத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், என்.எல்.சி நிர்வாகத்தை முற்றுகையிட்டு ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பணி நிரந்தரம், சம்பளம் உயர்வு உள்பட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி கடந்த 6 நாட்களாக என்.எல்.சி. ஜீவா தொழிற்சங்க ஒப்பந்த தொழிலாளர்கள், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
ஆனால், எந்த வித உடன்பாடும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இன்று தலைமை அலுவலகத்தில் இருந்து யாரும் வெளியேறாதபடி குடும்பத்துடன் சாலையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அங்கு தொழிற்பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று கோட்டாட்சியர் முன்னிலையில் பேச்சுவார்த்தைக்கு என்.எல்.சி அழைப்பு விடுத்து இருந்தது. எனினும் இந்த பேச்சுவார்த்தை தற்போது வரை தொடங்கப்படவில்லை.
சற்று நேரத்தில் தொடங்கும் என எதிர்பார்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தான் 6 நாட்களாக காத்திருக்கிறோம்.. எங்களுக்கு எந்த வித தகவலும் வரவில்லை.. அதிகாரிகள் மதிக்கவில்லை என்று கூறி ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராடி வருகிறார்கள். தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் யாரும் வெளியே வர முடியாதபடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications