அண்ணாமலை கைதை கண்டித்து தர்ணா.. பாஜகவினரை ஏற்றி சென்ற போலீஸ் வாகனம் மீது காலணி வீசிய திமுகவினர்
கடலூர்: பாஜக மகளிரணியினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாநில தலைவர் அண்ணாமலை கைதை கண்டித்து கடலூர் மாவட்டம் வடலூரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜகவினரை போலீஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். அப்போது அங்கிருந்த திமுகவினர் பாஜகவினரின் வாகனம் மீது காலணிகளை எடுத்து வீசியதாக தெரிகிறது.
சென்னையில் திமுக கூட்டத்தில் பாஜகவில் உள்ள நடிகைகளான குஷ்பு, காயத்ரி ரகுராம் , நமீதா, கவுதமி ஆகியோர் மீது தரக்குறைவான கருத்துகளை திமுக பேச்சாளர் சைதை சாதிக் தெரிவித்திருந்தார். இந்த வீடியோ வைரலானது.
சைதை சாதிக்கின் இந்த பேச்சுக்கு சொந்த கட்சியிலேயே பல நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி மன்னிப்பு கேட்டார்.

சைதை சாதிக்
ஆனால் சைதை சாதிக் மீது இதுவரை திமுக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுதான் பாஜகவினரின் ஆதங்கமாக இருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஒரு கட்சியின் தலைவராக சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அது நடக்கவில்லை என குஷ்பு தெரிவித்திருந்தார்.

மகளிரணி புகார்
இந்த நிலையில் பாஜக மகளிரணி பொதுச் செயலாளர் நித்யா, சைதை சாதிக் மீது புகார் கொடுத்ததன் பேரில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் கைது செய்யப்படாததாலும் திமுக தலைமை அவர் மீது நடவடிக்கை எடுக்காததாலும் கோபமடைந்த பாஜக மகளிரணியினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் அண்ணாமலை
இந்த ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு காவல்துறையினரிடம் பாஜக மகளிரணியினர் அனுமதி வாங்கவில்லை என தெரிகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு திமுகவை விமர்சித்தார். இதையடுத்து அண்ணாமலை உள்பட அங்கிருந்த பாஜக நிர்வாகிகளை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

தவறு செய்த சாதிக்
அண்ணாமலையை கைது செய்ததை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினரால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த வகையில் கடலூர் மாவட்டம் வடலூரில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கலைந்து போக சொல்லியும் கேட்காததால் பாஜகவினரை போலீஸார் கைது செய்து வேனில் ஏற்றினர்.

காலணி வீச்சு
அப்போது அங்கு வந்த திமுகவினர் பாஜகவுக்கு எதிராகவும் பாஜகவினர் திமுகவினருக்கு எதிராகவும் மாறி மாறி கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பாஜகவினரை அழைத்து செல்லும் வாகனம் மீது திமுகவினர் காலணிகளை வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்டம் காந்திபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அது போல் நாகர்கோவிலில் எம்எல்ஏ காந்தி தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications