’என்னையே விழ வச்சிட்டியே’ போதையில் விழுந்துவிட்டு.. நடுரோட்டில் வாலிபர் செய்த சம்பவம்! கடலூரில் ஷாக்
கடலூர்: மது போதையில் பைக்கில் இருந்து கீழே விழுந்த நபர், நடு ரோட்டில் தனது பைக்கை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனே தகவல் அறிந்த வந்த போலீசார் அந்த நபரை விசாரணைக்காக பிடித்து சென்றனர்.
மதுபோதையில் சிலர் செய்யும் அட்டகாசங்கள் சினிமா காமெடி காட்சிகளையே மிஞ்சும் அளவுக்கு உள்ளது. போதை தலைக்கேறிய நிலையில், சாலையில் நடனம் ஆடுவது.. தன்னிலை மறந்து என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் எதையாவது உளறிக்கொட்டுவது என சில போதை ஆசாமிகள் செய்யும் செயல் முகம் சுளிக்கும் வகையில் அமைந்து இருக்கும்.

இன்னும் சிலரோ, போதையில் சென்று சாலைகளில் பொது மக்களுக்கு இடையூறாக செயல்படுவது.. வாகனத்தை மறிப்பது என வம்படியாய் பிரச்சினையை இழுத்து போட்டுக்கொண்டு போதை தெளிந்த பிறகு "இப்படி சிக்கிக் கொண்டோமே" என அப்பாவியாய் முழித்துக் கொண்டு இருப்பார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி சம்பந்தபப்ட்ட நபர்கள் மட்டும் இன்றி குடும்பத்தினரையும் தர்மசங்கடத்திற்கு உள்ளாகும் வகையில் அமைந்து இருக்கும்.
அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன. இந்த நிலையில், கடலூர் மாவட்டத்தில் போதை ஆசாமி ஒருவர், பைக்கில் இருந்து கீழே விழுந்து விட்டு கோபத்தில் தனது பைக்கையே பெட்ரோல் ஊற்றி கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. இதைப்பார்த்து சக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த விவரம் வருமாறு; -
கடலூர் மஞ்சக்குப்பம் பாரதி சாலையில் நேற்று பிற்பகலில் இளைஞர் ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள மாநகராட்சிக்கு பூங்கா அருகே வந்து கொண்டிருந்த போது திடீரென சாலையில் பைக்கோடு கீழே விழுந்தார். இதனால், பைக்கின் பெட்ரோல் டேங்கில் இருந்தும் பெட்ரோல் வடிந்தது. இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த இளைஞர் வேகவேகமாக எழுந்தார்.
எனினும், இப்படி நம்மை கீழே விழ வைத்து அசிங்கப்படுத்தி விட்டதோ என்று எண்ணினாரோ என்னவோ தெரியவில்லை.. திடீரென நடு ரோட்டில் வைத்தே தனது பைக்கை தீ வைத்து கொளுத்த ஆரம்பித்து விட்டார். இதை பார்த்த சக வாகன அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக தீ அணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். தீ அணைப்பு வீரர்கள் வருவதற்குள் பைக் முறிலும் எரிந்து நாசம் ஆனது.
நடுரோட்டில் இளைஞர் ஒருவர் பைக்கிற்கு தீ வைத்த சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த கடலூர் புதுநகர் போலீசார், அந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அந்த நபர் நெய்வேலி அருகே உள்ள மதன கோபால்புரத்தை சேர்ந்த மேத்யூ (வயது 34) என்பதும் மதுபோதையில் பைக்கில் இருந்து கீழே விழுந்ததால் கோபத்தில் தனது பைக்கிற்கு வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பரபரப்பான சாலையில் ஒருவர் பைக்கிற்கு தீ வைத்த சம்பவம் வாகன ஓட்டிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications