கேட் கீப்பர் தூங்கிட்டாராமே.. கடலூரில் ரயில் வரும்போது கேட்டை மூடாதது உறுதி! இப்ப என்னாச்சு பாருங்க
கடலூர்: கடலூர் ரயில் விபத்தில் மூன்று பள்ளி மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து, அங்கிருந்த கேட்கீப்பர் பங்கஜ் ஷர்மா உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.. பிறகு கைது செய்யப்பட்டார்.. இப்போது நிரந்தரமாகவே நீக்கப்பட்டு விட்டார்.. இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது.. பங்கஜ் ஷர்மாவுக்கு பதில், செம்மங்குப்பம் ரயில் கடவையில் புதிய கேட் கீப்பரை தெற்கு ரயில்வே நியமித்துள்ளது.
கடந்த 8ம்தேதி, கடலூர் செம்மங்குப்பத்தில் ரெயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற தனியார் பள்ளி வேன் மீது ரெயில் மோதி ஒரு மாணவி மற்றும் 2 மாணவர்கள் என 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.. இந்த விபத்தானது தமிழகத்துக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை தந்திருந்தது.

உடனடியாக கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கைது செய்யப்பட்டார்.. இந்த விபத்துக்கு ரெயில்வே கேட்டை மூடாமல் இருந்த கேட் கீப்பர் தான் காரணம் என்று விபத்தை நேரில் கண்டவர்கள் கூறியிருந்தனர்.. ஆனால், கேட்கீப்பர் இதனை மறுத்தார்..
காரணம் என்ன?
கேட்டை மூடுவதற்கு முன்பாக திறந்துவிடும்படி வேன் டிரைவர் கேட்டு கொண்டதால்தான், கேட்டை மூடவில்லை என்று விளக்கம் தந்திருந்தார். எனவே, இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு தெற்கு ரெயில்வே உத்தரவிட்டது.. இதனை விசாரிக்க 3 பேர் கொண்ட விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டது.
அந்த குழுவினர் விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட ரெயில்வே கேட் கீப்பர் உள்ளிட்ட 13 பேரையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பி வைத்தனர்.. திருச்சி ஜங்ஷன் ரெயில்வே கோட்ட அலுவலகத்தில் உள்ள பாதுகாப்புத்துறைக்கான அலுவலகத்தில், இந்த விசாரணைக்குழுவின் விசாரணையும் ஆரம்பமானது.
11 பேரும் எழுத்துபூர்வ பதில்
கேட்கீப்பர் பங்கஜ் ஷர்மா, வேன் டிரைவர் தவிர, மற்ற 11 பேரும் ஆஜரான நிலையில், அவர்களிடம் விசாரணை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினார்கள்... அப்போது, ரெயில் வருவது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதா? தொழில்நுட்ப கோளாறு ஏதேனும் ஏற்பட்டதா?. சம்பந்தப்பட்ட ரெயில் கடந்து சென்றபோது, ரகசிய குறியீட்டு எண்கள் கொடுக்கப்பட்டதா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பியதாக தெரிகிறது.. இதற்கு 11 பேரும் தந்திருந்த பதில்களும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டன.
இதற்குபிறகு பங்கஜ் ஷர்மா, வேன் டிரைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.. மேலும், சம்பவ இடத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்து, விபத்தை நேரில் கண்டவர்களிடமும் விசாரணை நடத்தி அவர்களுடைய வாக்குமூலமும் பெறப்பட்டன.
கேட்கீப்பர் அலட்சியம்
இறுதியில், கேட் கீப்பர் பங்கஜ் சர்மா கேட்டை (LC-170) திறந்தே வைத்திருந்தது உறுதியானது.. அன்று காலை 6:45 மணிக்கு திருச்செந்தூரில் இருந்து சென்னைக்கு சென்ற எக்ஸ்பிரஸ் ரெயில் இந்த கேட் திறந்து இருந்தபோது சென்றுள்ளதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ரெயில்வே கேட்டை மூடாமலேயே மூடிவிட்டதாக பிரைவேட் எண்ணை ஸ்டேஷன் மாஸ்டருக்கு கேட் கீப்பர் பங்கஜ் சர்மா தந்ததும், விபத்துக்கு பிறகு, ஸ்டேஷன் மாஸ்டரை அழைத்து, 'கேட்டை மூடவில்லை' என்று ஒப்புக்கொண்டதும் ரெயில்வேயின் ஆட்டோமெடிக் வாய்ஸ் ரெக்கார்டரில் பதிவாகியிருக்கிறது.. அந்தவகையில், விபத்துக்கு காரணம், கேட் கீப்பரின் அலட்சியமே என்பது வெட்டவெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிரடி சஸ்பெண்டு
இந்நிலையில், ரயில்வே கேட்கீப்பர் பங்கஜ் சர்மா தற்போது அதிரடியாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.. தெற்கு ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி கணேஷ் தலைமையிலான விசாரணைக்குழுவானது, பங்கஜ் ஷர்மா, வேன் டிரைவர் சங்கர் என மொத்தம் 13 பேரிடம் விசாரணை நடத்தியது..
அதுதொடர்பான அறிக்கையையும், தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சமர்ப்பித்திருக்கிறது.. .
நிரந்தரமாக நீக்கம்
அந்த அறிக்கையில், "பங்கஜ் சர்மா, தொடர்ச்சியாக ஓய்வின்றி 3 நாட்கள் பணியில் ஈடுபட்டு இருந்ததும், இதனால் விபத்து நிகழ்ந்தபோதும் தூங்கியதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.. அதேபோல, ரயில்கள் வரும் நேரங்களில் ரயில்வே கேட்டை சில நேரங்களில் அடைத்தும், சில நேரங்களில் அடைக்காமலும் செயல்பட்டுள்ளது உறுதியாகியிருக்கிறது" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இதனை அடிப்படையாக வைத்து, கேட்கீப்பரை பணியிலிருந்து நிரந்தரமாக நீக்கி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications