கடலூரில் கணவனை செப்டிக் டேங்க்கில் மறைத்த மனைவி.. உதவிய தாய், கொத்தனார்.. எல்லாரும் இப்ப ஜெயிலில்
கடலூர்: கடலூர் அருகே தினமும் குடித்துவிட்டு, மனைவியை டார்ச்சர் செய்து வந்துள்ளார் குடிகார கணவர்.. தன்னுடைய மகன், மருமகளை டார்ச்சர் செய்வதை கண்டு கொந்தளித்துபோனார் தாய்.. போதை கணவரின் சித்ரவதையை சகிக்க முடியாமல் பொறுமை இழந்தார் மனைவி.. இறுதியில், ஒட்டுமொத்த பேரும் சேர்ந்து செய்த காரியம், கடலூரையே திகைக்க செய்துவிட்டது. இன்று இந்த குற்றவாளிகளுக்கு தண்டனையும் கிடைத்திருக்கிறது.
கடந்த 2019-ல் நடந்த சம்பவம் இது.. மயிலாடுதுறை மாவட்டம் கழுக்காலி முட்டத்தை சேர்ந்தவர் அய்யாப்பிள்ளை (எ) பூராசாமி.. இவருக்கு 50 வயதாகிறது.. கடலூர் மாவட்டம் வடலூரில் தங்கி கூலி வேலை செய்துவந்தபோது, பரிமளா (46) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.. பரிமளா வடலூரில் வசித்து வந்தார்.. திருமணமாகி 2 மகன்கள் இருக்கிறார்கள். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக கணவனை பிரிந்து வாழ்ந்து வந்தார்.

சொந்த வீடு கட்டிய பரிமளா
இந்நிலையில் அய்யாப்பிள்ளையும், பரிமளாவும் திருமணம் செய்துகொண்டனர்... இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார்.. வீட்டு வேலை செய்வதற்காக சிங்கப்பூர் சென்று வந்த பரிமளா, வடலூரில் சொந்த வீடு கட்டினார்.. அதற்குபிறகு, அவர் வெளிநாடு செல்லவில்லை.. இதற்கு நடுவில், அய்யாப்பிள்ளைக்கு மதுப்பழக்கம் அதிகரித்துவிட்டது.. தினமும் குடித்துவிட்டு வந்து பரிமளாவிடம் தகராறு செய்து, டார்ச்சர் தந்து வந்தார்.
கடந்த 22.3.2019 அன்று அய்யாப்பிள்ளை காணாமல் போய்விட்டார்.. எனவே, தன்னுடைய அண்ணனை காணவில்லை என்று அய்யாப்பிள்ளை சகோதரர் ராஜாராமன் வடலூர் போலீசில் புகார் தந்தார்.. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அய்யாப்பிள்ளையை தேடி வந்தனர். இறுதியில், 28.3.2019 அன்று, கணவரை கொன்றுவிட்டதாக சொல்லி, பரிமளா வானதிராயபுரம் விஏஓ-விடம் சரணடைந்தார்.
பகீர் வாக்குமூலம்
அப்போது போலீசாரிடம் தந்த வாக்குமூலத்தில், "கணவர் தினமும் மது குடித்துவிட்டு வந்து தன்னை அடித்து துன்புறுத்தியதால், சம்பவத்தன்று, தன்னுடைய அம்மா சரஸ்வதியுடன சேர்ந்து கட்டையால், தலையிலேயே அடித்து கொன்றுவிட்டதாக கூறினார்.. மேலும், சடலத்தை வீட்டின் பின்புறம் உள்ள செப்டிக் டேங்க்கில் போட்டுவிட்டதாகவும், இதற்கு வடலூர் பகுதியைச் சேர்ந்த கொத்தனார்கள் ராமலிங்கம் (72), தமிழரசன் (42) ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் வாக்குமூலத்தில் சொன்னார் பரிமளா.
நீதிபதி அதிரடி தீர்ப்பு
இதையடுத்து வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பரிமளா, சரஸ்வதி, தமிழரசன், ராமலிங்கம் ஆகியோரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு கடலூர் குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வந்தது.. சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில், நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு தரப்பட்டது.
நீதிபதி ஷோபனா தேவி தன்னுடைய தீர்ப்பில், வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் பரிமளாவுக்கு ஆயுள் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், கொலை குற்றத்தை மறைத்ததற்காக சரஸ்வதி, தமிழரசன், ராமலிங்கம் ஆகியோருக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார். கணவனை கொன்று செப்டிங் டேங்கில் மறைத்த மனைவிக்கு, ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது கடலூரில் பலரது கவனத்தை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications