என்.எல்.சி. பாய்லர் வெடித்து விபத்து- மேலும் ஒருவர் மரணம்- பலி எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு
கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் கொதிகலன் (பாய்லர்) வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் மேலும் ஒரு ஒப்பந்த தொழிலாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மத்திய அரசின் என்.எல்.சி. இந்தியா நிறுவனம் இயங்கி வருகிறது. இங்குள்ள இரண்டாம் அனல் மின் நிலையத்தில் உள்ள 6 வது உற்பத்தி பிரிவின் கொதிகலன் அமைப்பின் ஒரு பகுதியில் கடந்த 7-ந் தேதி மாலை திடீரென கொதிகலன் வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

இதில் அங்கு பணியில் ஈடுபட்டிருந்த நிரந்தர தொழிலாளர்களான பாவாடை, சர்புதீன், ஒப்பந்த தொழிலாளர்கள் சண்முகம், அன்புராஜன், ஜெய்சங்கர், ரஞ்சித்குமார், மணிகண்டன், பாலமுருகன் ஆகிய 8 பேர் பலத்த தீக்காயமடைந்தனர். இவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இதில் நெய்வேலி 29 வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த சர்புதீன், கொல்லிருப்பை சேர்ந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகம், நெய்வேலி 28 வது வட்டம் என்.எல்.சி. குடியிருப்பை சேர்ந்த நிரந்தர தொழிலாளி பாவாடை ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். மற்ற 5 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன் சிகிச்சை பலனின்றி உயிரிழத்துள்ளார்.

இதனால் என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே தீ விபத்தில் இறந்த ஒப்பந்த தொழிலாளி சண்முகத்தின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ.25 லட்சமும், நிபந்தனை ஏதுமின்றி குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும் வழங்குவதாக என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications