விஜய் கட்சிக்கு போங்க.. ஆனால் அடுத்த வரியே சீமான் சொன்ன வார்த்தை.. வெடித்து சிரித்த நிர்வாகிகள்
கடலூர்: நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீப காலமாகவே நிர்வாகிகள் விலகி, மாற்றுக் கட்சியில் இணைந்து வருகிறார்கள். இதற்கிடையே இது தொடர்பான கேள்விக்கு, ஏதோ ஒரு கட்சியில் இணைவதற்குப் பதிலாக விஜய் கட்சியில் இணையலாம் எனக் கூறினார். ஆனால், அடுத்த வரியே சீமான் அளித்த விளக்கத்தைக் கேட்டு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் வெடித்துச் சிரித்தனர்.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளராகச் சீமான் இருக்கிறார். தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது முதலே சீமான் தனித்தே போட்டியிட்டு வருகிறார். இதுவரை எந்தவொரு இடத்திலும் வெல்ல முடியவில்லை என்ற போதிலும், வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்தே வருகிறது. இது சீமானின் வளர்ச்சியாகவே பார்க்கப்படுகிறது.

சீமான்
இதற்கிடையே இந்தத் தேர்தலில் சீமான்- விஜய் உடன் இணைந்து செயல்படலாம் என முதலில் தகவல் வெளியானது. சீமானின் பேச்சும் விஜய்யை வரவேற்கும் வகையிலேயே இருந்தது. ஆனால், விஜய் கட்சியின் முதல் மாநாட்டிற்குப் பிறகு, சீமான் தனது டோனை மாற்றினார். விஜய் மீதான விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கினார். இந்தச் சூழலில் அவர் மீண்டும் விஜய்க்கு ஆதரவாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார்.
அதாவது சமீப காலமாகவே நாம் தமிழர் கட்சியில் இருந்து பல்வேறு நிர்வாகிகள் விலகி வருகிறார்கள். அவர்கள் மாற்றுக் கட்சிகளிலும் இணைந்து வருகிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு ஏதோ ஒரு கட்சியில் இணைவதற்குப் பதிலாக விஜய் கட்சியில் இணையலாம் எனக் கூறினார். ஆனால், அடுத்த வரியே சீமான் அளித்த விளக்கத்தைக் கேட்டு அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் வெடித்துச் சிரித்தனர்.
தம்பி கட்சிக்கு போங்க
கடலூரில் இது தொடர்பாகச் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விரும்பினால் கட்சியில் இருங்கள்.. இல்லை என்றால் கட்சியில் இருந்து விலக்கிக் கொள்ளலாம். எந்தக் கட்சிக்கோ போறதுக்கு என் தம்பி கட்சிக்குப் போகலாம்" என்று சொன்னார். ஆனால் அடுத்த வரியே அவர், "ஆனால், அவனும் முதலில் உங்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டுமே.. அவன் சேர்த்துக் கொள்ள மாட்டான் எனத் தெரிந்து தான் இதை நான் சொல்கிறேன்.
அடுத்த வரி சொன்ன வார்த்தை
எனது அண்ணனையே அந்த பாடுபடுத்தி உள்ளீர்கள்.. என்னை என்ன பாடுபடுத்தப் போகிறீர்களோ.. அதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லி அனுப்பி விடுவான்" என்று சொல்லிச் சிரித்தார். இந்த விளக்கத்தைக் கேட்டவுடன் அருகே இருந்த கட்சி நிர்வாகிகளும் வெடித்துச் சிரித்தனர்.
தொடர்ந்து பேசிய சீமான், "இன்னும் 4, 5 மாதங்கள் பொறுத்திருந்து பாருங்கள். நீங்கள் சிவன் ஆட்டத்தைப் பார்த்து இருக்கலாம்.. இனிமேல் தான் சீமான் ஆட்டத்தைப் பார்க்கப் போகிறீர்கள். தேர்தலுக்குத் தேவையான நுட்பங்களை வகுத்து வருகிறோம். இந்தப் பூமியைத் தாய்நாட்டை வாழும் சொர்க்கமாக மாற்றப் போகிறோம்" என்றார்.
தமிழ்நாடு அரசியல்
தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு தான் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால், இப்போதே தேர்தலை மனதில் வைத்துக் காய் நகர்த்தல்களைத் தொடங்கிவிட்டனர். திமுக தனது கூட்டணி தொடரும் என்பது போலவே கூறி வருகிறது. மறுபுறம் அதிமுக- பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. விஜய்யும் தனது கட்சித் தலைமையில் கூட்டணியை அமைக்கவிருக்கிறார். அதேநேரம் சீமான் இந்த முறையும் தனித்தே போட்டியிடப் போவதாகக் கூறி வருகிறார்.












Click it and Unblock the Notifications