நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனம்.. டிச.,27ல் கடலூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை - கலெக்டர்
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு டிசம்பர் 27 ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். மேலும் அன்றைய நாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்னொரு நாளை வேலை நாளாக அவர் அறிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் பிரசித்திப்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் தமிழ் மாதமான மார்கழியில் ஆருத்ரா தரிசன விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கமாகும்.

ஆருத்ரா என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் . ஆருத்ரா தரிசனம் என்பது சேந்தனார் வீட்டுக்கு சிவ பெருமான் களி உண்ண சென்ற மார்கழி மாத தினமாகும். இதனை தான் ஆருத்ரா தரிசனம் என கொண்டாடி வருகிறோம்.
இதனால் ஆருத்ரா தரிசன நாளில் ஒவ்வொருவர் வீட்டிலும் களி செய்து சிவனுக்கு படைப்பது வழக்கம். அதன்டி இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசனம் என்பது சிதம்பர் நடராஜர் கோவிலில் டிசம்பர் 27 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்ல உள்ளனர்.
இந்நிலையில் தான் ஆருத்ரா தரிசனத்தையொட்டி கடலூர் மாவட்டத்துக்கு டிசம்பர் 27 ம் தேதி உள்ளூர் விடுமுறை வழங்கி கலெக்டர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சார்பில் வெளியாகி உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் (சபாநாயகர் கோவில்) ஆருத்ரா தரிசனம் நடைபெறும் நாளான 27.12.2023 (புதன்கிழமை) கடலூர் மாவட்டத்திலுள்ள தமிழ்நாட அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிலையங்களுக்கும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. அவ்விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி மாதத்தில் விடுமுறை நாளான 06.01.2024 -சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.
மேலும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும் 27.12.2023 அன்று அவசர அலுவல்களை கவனிக்கும் பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு அலுவலகங்கள் அவசர பணிகளை கவனிக்கும் பொருட்டு குறைந்தப்பட்ச பணியாளர்களோடு செயல்படும் ’’ என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications