40 தொகுதியிலும் வென்றால் தான் அடுத்த ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்க முடியும்.. ஸ்டாலின் பரபர பேச்சு!
கடலூர்: வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும். 40 தொகுதிகளையும் வென்றால்தான் அடுத்து அமையும் ஆட்சியில் நாம் முக்கிய பங்காற்ற முடியும் என திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
நெய்வேலியில் திமுக எம்.எல்.ஏ சபா.ராஜேந்திரன் மகன் திருமணம் இன்று நடைபெற்றது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், ஜி20 மாநாட்டையொட்டி குடியரசுத் தலைவர் அளித்த சிறப்பு விருந்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற நிலையில், இந்த திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து வாழ்த்துரையாற்றினார். முதல்வர் ஸ்டாலின், காணொளிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், "தனது தொகுதிக்குத் தேவையான திட்டங்களை கேட்டுப் பெறுவதில், சபா. ராசேந்திரன் எப்போதுமே கண்ணும் கருத்துமாக இருப்பார். இது என்னை விட நெய்வேலி தொகுதி மக்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். தலைவர் கருணாநிதி முதலமைச்சராக இருந்த போது, நெல்லிக்குப்பம் தொகுதிக்கு உட்பட்ட மலட்டாறு திட்டத்தை நிறைவேற்ற வைத்தார். இதனால், அந்தச் சுற்றுவட்டாரத்தில் இருந்த நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.
பொதுவாக, திருமண விழாக்களில் கலந்து கொள்ளும்போது, என்னுடைய பேச்சின் இறுதியில், நான் ரெண்டு கோரிக்கைகள் வைப்பேன். மணமக்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் வைக்க வேண்டும் என்கிற முதல் கோரிக்கை. ராசேந்திரன் இல்லத் திருமண விழாவிலே நான் அந்தக் கோரிக்கையை வைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன். கண்டிப்பாக தமிழில் தான் பெயர் வைப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அதேபோல, இன்னொரு கோரிக்கை என்னவென்றால், மணமக்கள் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்குத் தொண்டர்களாக விளங்க வேண்டும் என்று சொல்வேன். நம்முடைய வீடு மட்டும் அல்ல, நாடும் நன்றாக இருக்க வேண்டும். அதற்காகவும் பங்களிக்க வேண்டும் என்று சொல்வேன்.
நம்முடைய நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால்தான் இந்தியாவையே காப்பாற்ற முடியும். ஆகவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருக்கிற 40 தொகுதிகளிலும் நாம் ஜெயித்தாக வேண்டும். அப்படி முழு வெற்றியை பெற்றால்தான் அடுத்து மத்தியில் அமையப்போகிற ஆட்சியிலும் நாம் முக்கியப் பங்காற்ற முடியும். நாம் எல்லோரும் சேர்ந்து உழைக்க இந்தத் திருமண விழாவில் உறுதி எடுத்துக் கொள்வோம். நாற்பதும் நமதே நாடும் நமதே" எனப் பேசியுள்ளார்.












Click it and Unblock the Notifications