பயங்கரம்.. சிதம்பரம் பாஜக ஒன்றிய தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசியல் முன்விரோதமா?
கடலூர்: கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பாஜக ஒன்றிய தலைவர் கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பரங்கிபேட்டை சலங்கைகாரன் தெருவை சேர்ந்தவர் தாமரை முருகன். இவர் பரங்கிபேட்டை வடக்கு ஒன்றிய பாஜக கட்சி தலைவராக உள்ளார்.
இவர் கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். நேற்று இரவு கட்சி பொதுகூட்டத்தில் பங்கேற்றுவிட்டு தாமரை முருகன் வீடு திரும்பினார்.

தீப்பற்றி எரிந்த கார்
இதையடுத்து தனது காரை வீட்டு முன்பு நிறுத்திய தாமரை முருகன் வீட்டு உள்ளே சென்று படுத்தார். இந்நிலையில் தான் நள்ளிரவில் வீட்டு அருகே பயங்கரமான வெடிசத்தம் கேட்டது. இந்த சத்தம் கேட்டு கண்விழித்த தாமரை முருகன் வீட்டில் இருந்து வெளியே ஓடி வந்தார். அப்போது வீட்டு அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் தீப்பற்றி எரிந்தது.

விரைந்த அதிகாரிகள்
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தண்ணீரை ஊற்றி அணைத்தார். இருப்பினும் காரின் பின்பக்க டயர் எரிந்தது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் அவரது வீட்டு முன்பு குவிந்தனர். இதனால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மேலும் சிதம்பரம் போலீஸ் டிஎஸ்பி ரமேஷ்ராஜா, பரங்கிபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குணபாலன் உள்ளிட்ட அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர்.

பெட்ரோல் குண்டு வீச்சு
மேலும் கார் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீசார் விசாரித்தனர். அப்போது கார் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதும், அதனால் தீப்பிடித்து எரிந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அந்தபகுதியில் இருந்த தடயங்களை போலீசார் சேகரித்தனர். கார் மீது பெட்ரோல் குண்டு வீசி சென்றவர்கள் யார்? எதற்காக வீசி சென்றனர்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காரணம் என்ன?
இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள்? என்பது பற்றியும், சொந்த பிரச்சனையா? இல்லை அரசியல் சார்ந்த விரோதமா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கார் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபரை விரைவில் கைது செய்வதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications