'கோட்'டை கழற்றிவிட்டு கோட்டையை சுற்றி வந்த விஜய்.. கூலிங் கிளாஸ் உடன் பேட்டரி காரில் மாஸ் விசிட்!
சென்னை: தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் முதலமைச்சர் ஜோசப் விஜய், இன்று தனது வழக்கமான அலுவல் பணிகளை முடித்த கையோடு, சென்னை தலைமைச் செயலக வளாகத்தை பேட்டரி வாகனத்தில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் விசிட், தலைமைச் செயலக ஊழியர்கள் மற்றும் அங்கிருந்த பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.

'கோட்' கழற்றிவிட்டு விஜய் ஆய்வு
முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு வரும் போது கோட் அணிந்து கம்பீரமாக வருவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்று மாலை, கோட்டை வளாகத்தை வலம் வருவதற்காகத் தனது சட்டை மேல் அணிந்திருந்த கோட்டை கழற்றிவிட்டு, பேட்டரி காரில் ஏறினார். ஸ்டைலாக கூலர்ஸ் அணிந்து பயணித்தார்.
தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டிடத்தில் இருந்து புறப்பட்ட அவர், கோட்டை வளாகத்தில் உள்ள பல்வேறு முக்கியப் பகுதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்டார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை பார்வையிட்ட விஜய்
பழமையும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திற்குள் அமைந்துள்ள பல முக்கிய இடங்களை முதலமைச்சர் விஜய் பார்வையிட்டார்:
கோட்டை அருங்காட்சியகம் (Museum): பிரிட்டிஷ் காலத்து வரலாற்று ஆவணங்கள் மற்றும் பழங்காலப் பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ள மியூசியம் பகுதியைச் சுற்றிப் பார்த்தார் விஜய்.
செயிண்ட் மேரிஸ் தேவாலயம் (St. Mary's Church): ஆசியாவிலேயே பழமையான ஆங்கிலேயக் கட்டுமானங்களில் ஒன்றான, கோட்டை வளாகத்தில் உள்ள புனித மேரி தேவாலயத்திற்குச் சென்று அதன் அமைப்பைப் பார்வையிட்டார்.
ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிகள்: கோட்டையின் ஒரு பகுதியில் அமைந்துள்ள இந்திய ராணுவத்திற்குச் சொந்தமான இடங்கள் மற்றும் பாதுகாப்புப் பகுதிகளைப் பேட்டரி காரில் சென்றபடியே உற்று நோக்கினார்.
இதனுடன், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் இயங்கும் கட்டிடப் பிரிவுகளுக்கும் சென்று அங்கிருந்த உள்கட்டமைப்பு வசதிகளைக் கவனித்தார்.
குவியத் தொடங்கிய ஊழியர்கள்
முதலமைச்சர் விஜய் பேட்டரி காரில் தலைமைச் செயலக வளாகத்தை வலம் வருகிறார் என்ற தகவல் காட்டுத்தீ போல பரவியதை அடுத்து, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்களும், அதிகாரிகளும் தங்களின் பணிகளைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு வளாகப் பகுதிகளில் குவியத் தொடங்கினர்.
உற்சாக வரவேற்பு
பேட்டரி காரில் புன்னகையுடன் கைகளை அசைத்தபடி வந்த முதலமைச்சர் விஜய்க்கு, ஊழியர்களும் தொண்டர்களும் கைதட்டியும், வாழ்த்து முழக்கங்களை எழுப்பியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஊழியர்கள் பலரும் தங்களது மொபைல் போன்களில் முதலமைச்சரின் இந்த விசிட்டை புகைப்படம் மற்றும் வீடியோக்களாகப் பதிவு செய்து மகிழ்ந்தனர்.
தலைமைச் செயலகத்தில் வழக்கமாக இருக்கும் இறுக்கமான அரசியல் சூழலை மாற்றி, ஊழியர்களுடன் மிகவும் இயல்பாக முதலமைச்சர் விஜய் கலந்துரையாடிய இந்த 'கோட்டை உலா' தற்போதைய தலைமைச் செயலக வட்டாரத்தில் மிகவும் சுவாரசியமாகப் பேசப்பட்டு வருகிறது.
35 அமைச்சர்கள் பதவியேற்பு
மே 10 அன்று முதலமைச்சர் விஜய்யுடன் 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்ற நிலையில், மே 21 அன்று நடைபெற்ற விரிவாக்கத்தில் காங்கிரஸ் மற்றும் தவெக-வைச் சேர்ந்த மேலும் 23 எம்.எல்.ஏ-க்கள் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுக் கொண்டனர். இன்று விசிக, ஐ.யு.எம்.எல் கட்சியைச் சேர்ந்த தலா ஒருவர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளனர். இதன் மூலம் அமைச்சரவையின் மொத்த இடங்களான 35-ம் முழுமையாகப் பூர்த்தி செய்யப்பட்டுவிட்டன.












Click it and Unblock the Notifications