Cuddalore: ’நீதிபதியை கொல்லுவேன்’ கோர்ட்டிலேயே மிரட்டல் விட்ட ரவுடி.. சிறையில் எடுத்த துயர முடிவு.. என்ன நடந்தது?
கடலூர்: நீதிபதியை கொலை செய்வேன் என்று கோர்ட்டிலேயே மிரட்டலாக பேசிய நபர் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால், தனது கணவர் தூக்கு போடும் அளவுக்கு கோழை இல்லை எனவும், அவர் அடித்து கொல்லப்பட்டு இருப்பதாகவும் உயிரிழந்தவரின் மனைவி குற்றம் சாட்டியுள்ளார்.
மதுரையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கு குறித்த விவரங்களை பார்க்கலாம்.

கஞ்சா வழக்கில் கைது
கடந்த 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மதுரையில் உள்ள கீரைத்துறை காவல் துறையினருக்கு வில்லாபுரம் அருகே கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதிக்கு சென்ற கீரைத்துறை போலீசார், பாண்டியராஜன் மற்றும் அவரது சகோதரர் பிரசாந்த், பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது 25 கிலோ உலர் கஞ்சா இலைகளை வைத்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். மூன்று பேரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில், மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி வெள்ளை காளியின் அண்ணன் சின்ன முனுசு மகன் சண்முகவேலு இரவு நேரத்தில் வந்து 25 கிலோ கஞ்சாவை வைத்திருக்குமாறு கொடுத்ததாக தெரிவித்தனர்.
நீதிபதியை கொல்லுவேன் என அடாவடி
மேலும் அந்த கஞ்சாவை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்ததாகவும், அதன் பிறகு கஞ்சா வழக்கில் சண்முகவேலு சிறைக்கு சென்றுவிட்டதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து, பாண்டியராஜன், பிரசாந்த், பாண்டியராஜனின் மனைவி சரண்யா ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து 12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் நீதிபதியையே மிரட்டும் வகையில், நீதிபதி கொல்லுவேன் என்றும் வெளியில் வந்து உனக்கு இருக்கு.. என கெட்ட வார்த்தையில் பேசி, அட்ராசிட்டியில் ஈடுபட்டுள்ளனர்.
சிறையில் தூக்கில் தொங்கியதாக
இதனால், அவர்கள் மீது மேலும் ஒரு வழக்கு பதியப்பட்டது. இந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த ஜாக்கி என்ற பிரசாந்த், நேற்று முன் தினம் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அவர் அந்த அறையில் உள்ள மின்விசிறியில் லுங்கியை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரசாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
என் கணவர் கோழை கிடையாது
பிரசாந்தின் மனைவி கனி, தனது கணவர் அடித்து கொலை செய்யப்பட்டுவிட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த 1 ஆம் தேதி தனது கணவர் தன்னிடம் வீடியோ காலில் பேசியதாகவும், பிறகு சாதாரண காலில் பேசியதாகவும், அப்போது நன்றாக இருந்ததாகவும் கூறினார். தன்னை துன்புறுத்துவதாக கணவர் தன்னிடம் கூறி வந்த நிலையில்தான் தற்போது கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் பிரசாந்தின் மனைவி குற்றம் சாட்டினார்.
நீதிமன்றத்தில் சண்டை போட்டதால் தனது கணவரையும் அவரது அண்ணனையும் தனித்தனி சிறையில் நீதிபதி அடைத்துவிட்டதாகவும், தனது கணவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் பிரசாந்தின் மனைவி கூறினார். கடலூருக்கு போனதில் இருந்தே தனது கணவரை தொந்தரவு செய்துள்ளனர். தனது கணவர் தூக்கு மாட்டும் அளவுக்கு கோழை கிடையாது. போலீசார் சொல்வதை நம்ப மாட்டோம். தனது கணவரை கொடுமைப்படுத்தி கொலை செய்துள்ளனர்" என்றார்.
நீதிபதிக்கே மிரட்டல்
சிறையில் உயிரிழந்த ஜாக்கி என்ற பிரசாந்த் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. சிறு சிறு பிரச்சினைகளுக்கு கூட கத்தியை காட்டி மிரட்டி பம்மாத்து காட்டும் பிரசாந்த், ஒரு கட்டத்தில் நீதிபதிக்கே மிரட்டல் விடுக்கும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், கடைசியில் இப்படி ஒரு பரிதாபமான முடிவை எடுத்திருக்கிறார் எனவும் மதுரை மக்கள் கூறியதை பார்க்க முடிகிறது.












Click it and Unblock the Notifications