ஜட்ஜ் வீட்டில் கட்டுக் கட்டாக பணம்.. தலைசுற்றிப் போன அதிகாரிகள்.. தலைமை நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு
டெல்லி: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஸ்வந்த் வர்மாவின் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டபோது ஒரு அறையில் இருந்து கட்டுக் கட்டாக கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டது. இதை அடுத்து அவர் அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு கண்டனம் எழுந்த நிலையில் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த மூன்று நீதிபதிகள் கொண்ட குழுவை அமைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா உத்தரவிட்டிருக்கிறார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக யஸ்வந்த் வர்மா பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின் போது அவரது வீட்டில் இருந்த அறையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
யஸ்வந்த் வர்மா பண்டிகைக்காக வெளியூர் சென்ற நிலையில் அருகில் இருந்தோர் தீ விபத்து குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அப்போது யஸ்வந்த் வர்மாவின் வீட்டின் மற்றொரு அறையில் கட்டுக் கட்டாக பணம், நகைகள் ஆகியவை இருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் பணம் இருந்த நிலையில் மேலும் சில பணக் கட்டுகள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த தீயணைப்பு வீரர்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளித்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் எரிந்த நிலையில் இருந்த பணக் கட்டுகள், மற்றும் மீதமிருந்த பணக் கட்டுகள், நகைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இந்த தகவல் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கொலிஜியம் ஆலோசனை நடத்திய நிலையில் யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்றம் செய்யப்பட்டதாக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் யஸ்வந்த் வர்மாவை அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக மாற்ற பார் அசோசியேஷன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன.
இந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக யஸ்வந்த் வர்மா இடமாற்றம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் தவறு என்றும், அவரது இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவு பரிசீலனையில் மட்டும் இருப்பதாக உச்ச நீதிமன்றம் விளக்கம் அளித்து இருந்தது. இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வழிகாட்டுதலின் பேரில் மூன்று பேர் கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது யஸ்வந்த் வர்மா அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா மூன்று நீதிபதிகள் கொண்ட விசாரணை குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதில் பஞ்சாப் மற்றும் அரியானா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஷீல் நாகு இமாச்சலப் பிரதேச தலைமை நீதிபதியான ஜிஎஸ் சந்தவாளியா, கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். பண சர்ச்சை விவகாரம் தொடர்பாக இவர்கள் நீதி விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளிப்பார்கள் என்றும், அதற்கு பிறகு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பார் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications