அவ்வளவு பேசுற பாகிஸ்தான்.. ஏன் இந்த திருட்டுத்தனத்தை செய்யனும்? இந்தியா இழுத்து புடிக்கணும்!
டெல்லி: இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வர்த்தகம் நடைபெறுவது கிடையாது. இருப்பினும் ஆண்டுக்கு 10 பில்லியன் மதிப்பிலான இந்திய பொருட்கள் பாகிஸ்தானுக்கு போகின்றன. இந்தியா இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.
10 பில்லியன் பொருட்கள் எப்படி அங்கே போகிறது? இது எப்படி சாத்தியம்? இதை இந்தியாவால் தடுக்க முடியாதா? உள்ளிட்ட விஷயங்களை இந்த செய்தி விளக்குகிறது.

சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (GTRI) இது குறித்து ஆய்வு செய்து விஷயங்களை வெளியில் கொண்டு வந்திருக்கிறது. அதாவது இந்தியாவில் உற்பத்தியாகும் பொருட்கள் நேரடியாக பாகிஸ்தானுக்கு போவது கிடையாது. அது முதலில் இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு போகிறது. அதாவது இலங்கை, வங்கதேசம் மற்றும் துபாய், சிங்கப்பூருக்கு போகிறது. அங்கிருந்து பாகிஸ்தானுக்கு ஏற்றுமதியாகிறது. இப்படி ஏற்றுமதியாகும் பொருட்களின் மதிப்பு 10 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.
முதற்கட்டமாக வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய பொருட்கள் அங்குள்ள கிடங்குகளில் சேமித்து வைக்கப்படுகிறது. சேமிக்கப்பட்ட பொருட்களின் மேல் ஒட்டப்பட்டிருக்கும் 'மேட் இன் இந்தியா' என்கிற ஸ்டிக்கரை மாற்றி 'மேட் இன் இலங்கை', 'மேட் இன் யுஏஇ' என லேபில்கள் ஒட்டப்படுகின்றன. பின்னர் அங்கிருந்து பாகிஸ்தானுக்கு போகும் கப்பல்களில் அப்பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இப்படியாக இந்திய பொருட்கள் பாகிஸ்தானுக்கு போகின்றன. இப்படி செய்வதன் மூலம் இந்திய அரசு விதித்த வர்த்த தடைகள் மீறப்படுகின்றன.
மட்டுமல்லாது இப்படி ஏற்றுமதியாகும் பொருட்களின் விலையும் அதிகமாக வைத்து விற்பனை செய்யப்படுகிறது. உதாரணமாக இங்கு ஒரு பொம்மை 10 ரூபாய்க்கு விற்கப்படுகிறது எனில், பாகிஸ்தானில் இதன் விலை 30 ரூபாயாக இருக்கும். அதே நேரம் பாகிஸ்தான் அதிகாரிகள் இதனை கண்டும் காணாமலும் விட்டுவிடுகின்றனர். இது 100% சட்டவிரோதம் என்று சொல்லிவிட முடியாது. இருப்பினும், இது நேர்மையான வர்த்தக நடைமுறையில்லை.
இதற்கு முன்னர் இரு நாடுகளுக்கு இடையே ஓரளவுக்கு வர்த்தகம் நடைபெற்று வந்தது. குறிப்பாக இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கு $447.65 மில்லியன் அளவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. அங்கிருந்து இங்கு $0.42 மில்லியன் அளவுக்கு இறக்குமதி செய்யப்பட்டிருந்தது. இந்தியாவிலிருந்து
ஆர்கானிக் ரசாயனங்கள் ($129.55 மில்லியன்)
மருந்துப் பொருட்கள் ($110.06 மில்லியன்)
சர்க்கரை மற்றும் சர்க்கரைச் சாகுபடி பொருட்கள் ($85.16 மில்லியன்)
ஆகியவை பெரும் அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. இது தவிர காய்கறிகள், காபி, தேநீர், மசாலா, உரம், பிளாஸ்டிக், ரப்பர், கார் பாகங்களும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு பழங்களும், உலர் விதைகளும், எண்ணெய் விதைகளும் இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. இப்போது இந்த வர்த்தகம் முழுவதுமாக முடங்கியிருக்கிறது. அதே நேரம் சட்டவிரோதமாக நேர்மையில்லாமல் நடக்கும் வணிகத்தையும் தடுக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்திருக்கின்றன.












Click it and Unblock the Notifications