லோக்சபா தேர்தலில் VVPAT சீட்டை 100% எண்ண 12 நாள் ஆகும்.. உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்
டெல்லி: லோக்சபா தேர்தலில் விவிபேட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் முழுவதுமாக எண்ணி முடிக்க 12 நாட்கள் வரை ஆகும் என உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் 7 கட்டங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் இவிஎம் எனும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீப காலமாக வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்பி வருகின்றன.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் மத்தியில் ஆளும் பாஜக முறைகேடு செய்கிறது. இதனால் மக்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களின் மீது நம்பிக்கை என்பது குறைந்து வருகிறது என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் எனும் ஒப்புகை சீட்டு வழங்கும் இயந்திரம் உள்ளிட்டவற்றுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா திபன்கர் தத்தா ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், தேர்தலில் வாக்காளர்கள் ஓட்டளித்ததை 100 சதவீதம் உறுதி செய்யும் வகையில் விவிபேட் இயந்திரம் மூலம் ஒப்புகை சீட்டு வழங்கப்படுகிறது. ஒரு தொகுதியில் 200 வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தும்போது 2 சதவீத ஒப்புகை சீட்டு இயந்திரங்கள் மட்டுமே சரிபார்க்கப்படுகின்றது. மேலும் விவிபேட்டில் ஒப்புகை சீட்டு வருகிறதா? என்பதை அறிய முடியாத வகையில் கண்ணாடி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நம்பகத்தன்மையில் கேள்விக்குறி உள்ளது. 100 சதவீதம் வரை விவிபேட் ஒப்புகை சீட்டை சரிபார்க்க வேண்டும்'' என வாதம் முன்வைக்கப்பட்டது.
இந்த வேளையில் திடீரென்று குறுக்கிட்ட நீதிபதிகள், ‛‛இந்தியாவில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை இப்போது 97 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் 65 சதவீதம் பேர் வாக்களிக்களிக்கிறார்கள் என்றாலும் கூட அத்தனை வாக்குகளை எண்ணி முடிக்க எத்தனை நாட்கள் ஆகும்'' என்று கேள்வி கேட்டார்.
அதற்கு தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ‛‛97 கோடி பேரின் வாக்குகளை எண்ண 12 நாட்கள் வரை ஆகலாம்'' என தெரிவித்தது. முன்னதாக, லோக்சபா தேர்தலில் பதிவாகும் மொத்த வாக்குகளையும் எண்ணி முடிக்க 12 நாட்கள் ஆகும் என தேர்தல் ஆணையம் தனது பிரமாண பத்திரத்தில் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து தற்போதைய தேர்தல் நடைமுறையில் பின்பற்றும் அனைத்து விபரங்களை தேர்தல் ஆணையம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளுடன் விவிபேட் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்துடன் 100 சதவீதம் சரிபார்க்கக் கோரிய மனுக்கள் மீதான விசாரணையை ஏப்ரல் 18ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.












Click it and Unblock the Notifications