அலறிய டெல்லி.. அதிர்த்த போலீஸ்! பலாத்காரம் செய்த மகன் - தாயை துப்பாக்கியால் சுட்ட 16 வயது சிறுமி
டெல்லி: 50 வயது பெண்ணை 16 வயது சிறுமி துப்பாக்கியால் சுட்ட சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை அடுத்த சில மணி நேரத்தில் கைது செய்த டெல்லி காவல்துறை, யார் இந்த சிறுமி? 50 வயது பெண்ணை துப்பாக்கியால் சுடும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை? அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லி பஜன்புரா அருகே உள்ள கோண்டா பகுதியில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு அவசர தொலைபேசி அழைப்பு வந்து இருக்கிறது.
உடனே காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் துப்பாக்கியால் சுட்டவர் வெறும் 16 வயதே ஆன சிறுமி என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

துப்பாக்கியால் சுட்ட சிறுமி
16 வயது சிறுமி 50 வயது மதிக்கத்தக்க பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்சென்றதாக அப்பகுதி மக்கள் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்கள். துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த பெண்ணை அப்பகுதி மக்கள் அங்குள்ள ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்று இருக்கின்றனர்.

யார் எந்த பெண்?
உடனே அந்த மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் துப்பாக்கியால் சுடப்பட்ட பெண்ணை பற்றியும், அவர் மீது தாக்குதல் நடத்திய சிறுமி யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த பெண் தான் வசிக்கும் வீட்டின் கீழ் தளத்தில் மளிகை கடை ஒன்றை நடத்தி வருவது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.

அடையாளம் கண்ட காவல்துறை
அந்த பெண் கடையில் இருந்தபோது, 16 வயது சிறுமி அங்கு வந்து பெண்ணை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண், அவரது குடும்பத்தினர் மற்றும் அப்பகுதி மக்களால் அந்த சிறுமியை அடையாளம் காண முடிந்ததாக போலீசார் தெரிவித்து உள்ளார்கள். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தப்பிச்சென்ற சிறுமியை தேடி வருகின்றனர்.

சில மணி நேரத்தில் கைது
இதனை தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணை மற்றும் தேடுதல் வேட்டையின் முடிவில் அந்த சிறுமியை துப்பாக்கிச்சூடு நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கி ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டது. யார் இந்த சிறுமி? 50 வயது பெண்ணை துப்பாக்கியால் சுடும் அளவுக்கு அவருக்கு என்ன பிரச்சனை? அவருக்கு துப்பாக்கி கிடைத்தது எப்படி? என்ற கேள்விகளுடன் அடுத்தக்கட்ட விசாரணையை போலீசார் தொடங்கினர்.

அதிர்ச்சி காரணம்
அப்போதுதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பிஞ்சு கையில் துப்பாக்கியை ஏந்தி சுடும் அளவிற்கு அவரது வாழ்க்கையில் ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது. ஆம், துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கும் பெண்ணுக்கு 25 வயதில் ஒரு மகன் இருக்கிறார். அவர்தான் மொத்த பிரச்சனைக்கும் காரணம்.

பாலியல் பலாத்காரம்
கடந்த 2021 ஆம் ஆண்டு அவர் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார். அப்போது இவருக்கு வெறும் 14 வயதுதான். இது தொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்தது. இளைஞர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் தற்போது சிறையில் உள்ளார்.

புரியாத புதிர்
ஆனால், சுமார் ஓராண்டு கழித்து அந்த இளைஞரின் தாயாரை சுட்டுக்கொல்ல இந்த சிறுமி முயற்சி செய்தது ஏன்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்றே போலீசார் தெரிவிக்கின்றனர். விசாரணை ஆரம்ப கட்டத்திலேயே இருப்பதாகவும், சிறுமியிடம் முழு விசாரணை நடைபெற்ற பிறகு உண்மை தெரியவரும் என்றும், முன் விரோதம் காரணமாக இதை செய்திருக்கலாம் என்றும் பெண்ணின் உறவினர்கள் கூறுகிறார்கள்.


Click it and Unblock the Notifications
