ஆபரேஷன் தாமரை! பாஜகவில் இன்று இணைந்த அதிமுக, காங்கிரஸ் மாஜி எம்.எல்.ஏக்கள் 15 பேர்!
டெல்லி: லோக்சபா தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் தமிழ்நாட்டிலும் ஆபரேஷன் தாமரையை பாஜக செயல்படுத்த தொடங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக அதிமுக, காங்கிரஸ் கட்சியின் 15 முன்னாள் எம்.எல்.ஏக்கள் இன்று டெல்லியில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் சந்திரசேகர், எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தலைமையில் அணிகள் உருவாகி உள்ளன. திமுக அணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. அதிமுக அணியில் எஸ்டிபிஐ உள்ளிட்ட சிறு கட்சிகள் இணைந்துள்ளன. பாஜக அணியில் அமமுக இணைந்து தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பாமக, தேமுதிக, தமாகா, புதிய தமிழகம் கட்சிகள் எந்த நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. நாம் தமிழர் கட்சி வழக்கம் போல தனித்தே போட்டியிடுகிறது.

அதிமுக-பாஜக கூட்டணி முறிவு: தமிழ்நாட்டில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் அதிமுகவும் இடம் பெற்றிருந்தது. ஆனால் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து சீண்டியதால் அண்ணா திமுக கூட்டணியையே முறித்துக் கொண்டது. இதனை டெல்லி பாஜக தலைமை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தேசிய அளவில் பாஜகவின் கூட்டணியில் 2-வது பெரிய கட்சியாக அதிமுகதான் இருந்து வந்தது.
சமரச முயற்சிகளா?: இந்நிலையில் அண்ணா திமுகவை பாஜக கூட்டணியில் மீண்டும் இணைப்பதற்கான பேச்சுவார்த்தைகளும் டெல்லியால் மேற்கொள்ளப்பட்டன. தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து இது தொடர்பாக பேசியிருந்தார். ஆனால் பாஜக கூட்டணிக்கு மீண்டும் திரும்பும் பேச்சுக்கே இடமில்லை என எடப்பாடி திட்டவட்டமாகவே தெரிவித்துவிட்டார். இதனால் பாமகவை பாஜக அணிக்கு கொண்டு வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேமுதிகவைப் பொறுத்தவரை 4 லோக்சபா தொகுதிகள், 1 ராஜ்யசபா சீட் தரும் கட்சியுடன் கூட்டணி என்கிறது. தேமுதிகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது. இன்றைய கூட்டத்தில் கூட்டணி குறித்து தேமுதிக இறுதி முடிவெடுக்கிறது.
பாஜகவில் 15 மாஜி எம்.எல்.ஏக்கள்: இப்பின்னணியில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இன்று டெல்லி செல்கிறார். அவர் தம்முடன் அதிமுக, காங்கிரஸ் கட்சிகளின் 15 முன்னாள் எம்.எல்.ஏக்களை அழைத்துச் செல்கிறாராம். அதிமுகவில் இருந்து 14 மாஜி எம்.எல்.ஏக்களும் காங்கிரஸில் இருந்து ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வும் இன்று பாஜகவில் இணைய உள்ளனர்.
யார் யார் இணைய உள்ளனர்?: பாஜகவில் இணைய உள்ள சில முன்னாள் எம்.எல்.ஏக்கள்: வடிவேல் - கரூர்; P.S. கந்தசாமி - அரவக்குறிச்சி; கோமதி சீனிவாசன் (முன்னாள் அமைச்சர்) - வலங்கைமான்; சின்னசாமி -சிங்காநல்லூர்; R. துரைசாமி (எ) சேலஞ்சர் துரை -கோயம்புத்தூர்; M.V.ரத்தினம் - பொள்ளாச்சி; S.M.வாசன் - வேடசந்தூர்; S.முத்துகிருஷ்ணன் - கன்னியாகுமரி; அருள் - புவனகிரி; N.R.ராஜேந்திரன்; R.தங்கராசு - ஆண்டிமடம்; குருநாதன் , V.R. ஜெயராமன் - தேனி, பாலசுப்ரமணியன் - சீர்காழி, சந்திரசேகர் - சோழவந்தான்.
மோடி பயணம்: பிரதமர் மோடி வரும் 25-ந் தேதி தமிழ்நாடு வருகை தருகிறார். பல்லடத்தில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்று பேசுகிறார். பிரதமர் மோடி வருகையின் போது மேலும் சில முக்கிய அரசியல் தலைவர்களை பாஜகவில் சேர்க்கவும் அண்ணாமலை திட்டமிட்டுள்ளாராம். அதாவது தமிழ்நாட்டில் மாற்று கட்சியினரை வளைக்கும் ஆபரேஷன் தாமரையை ஜரூராக செயல்படுத்த தொடங்கிவிட்டது பாஜக என்பதையே இத்தகைய நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாக்குகின்றன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.












Click it and Unblock the Notifications