நாடு முழுவதும் எத்தனை கோடி டோஸ் தடுப்பூசி தேவை?... ராஜ்யசபாவில் மத்திய இணையமைச்சர் பதில் இதுதான்
இந்தியாவில் 18 வயது பிரிவினருக்கு போடுவதற்கு 188 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ராஜ்யசபாவில் எழுத்துமூலம் பதில் அளித்துள்ளார்.
டெல்லி: நாட்டில் 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 94 கோடி மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 188 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படும் என்று ராஜ்யசபாவில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவிண் பவார் கூறியுள்ளார்.
'இந்தியாவில் தேவைப்படுகிற தடுப்பூசிகளை தயாரிக்கிற திறன், தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களுக்கு இருக்கிறதா?' என்று ராஜ்யசபாவில், கேள்வி எழுப்பப்பட்டது. இந்தக் கேள்விக்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவிண் பவார் எழுத்து மூலம் பதில் அளித்துள்ளார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு பதிலளித்து மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார், கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட 921 பேருக்கு ஜூலை 15ஆம் தேதி வரை தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

எத்தனை கோடி தடுப்பூசி
பாரதி பிரவிண் பவார் அளித்துள்ள பதிலில், 18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினரின் மக்கள் தொகை 94 கோடி ஆகும். எனவே இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு 188 கோடி டோஸ் தடுப்பூசி தேவைப்படுகிறது.

187 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும்
எதிர்காலத்தில் ஒற்றை டோஸ் தடுப்பூசியின் பயன்பாடுகளுக்கு இந்தியாவில் ஒப்புதல் அளிக்கப்படுமானால் இந்த எண்ணிக்கை குறையும் என்று தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை நமது நாட்டில் 187 கோடி டோஸ் தடுப்பூசி கிடைக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளின் விலை
தற்போது உருவாக்கப்பட்டு வருகிற தடுப்பூசிகளுக்கும் ஒப்புதல் கிடைக்கக்கூடும். எனவே தகுதியான மக்களுக்கு மேலும் தடுப்பூசிகள் வரும் என்றும் கூறியுள்ளார். "கோவிஷீல்டு தடுப்பூசி ரூ.600, கோவேக்சின் தடுப்பூசி ரூ.1,200, ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலை ரூ.948 என்ற விலையில் தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்யலாம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

ரூ.150 கட்டணம்
தனியார் கொரோனா தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடுவதற்கு சேவைக் கட்டணம் ரூ.150 என அரசு நிர்ணயித்தள்ளது. அதே நேரத்தில் அரசு தடுப்பூசி மையங்களில் இலவசமாகவே தொடர்ந்து தடுப்பூசி போடப்படும் எனவும் அமைச்சர் பாரதி பிரவிண் பவார் தெரிவித்தார். மேலும், தனியார் மருத்துவமனைகளுக்கு தடுப்பூசி கொள்முதலுக்கான விலையை தடுப்பூசி உற்பத்தியாளர்கள் நிர்ணயம் செய்துகொள்ளலாம். ஆனால் அதில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.

கொரோனா இழப்பீடு தொகை
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் என எத்தனை பேருக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவின் பவார் எழுத்துப் பூர்வமாக அளித்த பதிலில், பிரதான் மந்திரி கரீப் கல்யான் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் சுகாதாரப் பணியாளர்களுக்காக காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.

காப்பீடு திட்டம் நீட்டிப்பு
அந்தத் திட்டத்தின் கீழ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடி தொடர்பில் இருந்து பாதிக்கப்படும் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் ஒவ்வொரு சுகாதாரப் பணியாளருக்கும் 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்த காப்பீடு திட்டம் 2021, ஏப்ரல் 24ஆம் தேதி முதல் கூடுதலாக 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மருத்துவர்கள்
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் எத்தனை பேர் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதரப் பணியாளர்கள் என அவர்கள் வகித்த பதவி வாரியான கணக்கு அரசிடம் இல்லை. ஆனால், 2021, ஜூலை 15ஆம் தேதி வரை, கொரோனா தொற்றால் உயிரிழந்த மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட் 921 பேருக்கு தலா ரூ.50 லட்சம் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளது எனவும் பதிலளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications