செல்வப்பெருந்தகை நீக்கம்? டெல்லிக்கு படையெடுத்த 2 எம்எல்ஏக்கள், 25 காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள்!
டெல்லி: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்கியாக வேண்டும் என டெல்லி காங்கிரஸ் மேலிடத்தில் 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் நேரில் வலியுறுத்தி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கடும் போட்டிக்கு நடுவே செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டார். செல்வப்பெருந்தகை, தமிழக காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைகிறது.

இந்த நிலையில் செல்வப்பெருந்தகைக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் காங்கிரஸ் கட்சிக்குள் கடும் எதிர்ப்பு அலை உருவாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்களை மாற்றுவதற்கு செல்வப்பெருந்தகை தீவிரமாக முயற்சித்து வந்தாலும் டெல்லி மேலிடத்திடம் இருந்து இன்னும் ஒப்புதல் கிடைக்கவில்லை. டெல்லியில் முகாமிட்டுள்ள செல்வப்பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் தலைவர்கள் இதனைத் தடுத்து கொண்டே வருகின்றனராம்.
இதனால் மாவட்ட தலைவர்களைத் தவிர இதர நிர்வாகிகளை செல்வப்பெருந்தகை நியமித்து வருகிறாராம். இது காங்கிரஸ் கட்சிக்குள் கடும் புயலை கிளப்பி இருக்கிறது. இந்த நிலையில்தான் டெல்லிக்கு தமிழக காங்கிரஸின் 2 எம்.எல்.ஏக்கள் மற்றும் 25 மாவட்ட தலைவர்கள் படையெடுத்துள்ளனர்.
டெல்லிக்கு சென்ற தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள், புதிய மேலிடப் பொறுப்பாளரான கிரிஷ் சோடங்கரை நேற்று சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, செல்வப்பெருந்தகைக்கு எதிராக பெரிய புகார் பட்டியலையே கொடுத்துள்ளனர். மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக செல்வபெபெருந்தகை தொடர்ந்து நீடிதத்தால் 2026-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் எனவும் அதிருப்தியாளர்கள் சுட்டிக்காட்டி இருக்கின்றனர்.
மேலும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் செல்வப்பெருந்தகை இணக்கமாக இல்லாமல் ஆளும் திமுக அரசுடனான நல்லுறவில் மட்டுமே கவனமாக இருக்கிறார்; இதனால் காங்கிரஸ் கட்சியின் தனித்துவம் இல்லாமலே போகிறது எனவும் புகார் தெரிவித்துள்ளனர் தமிழக காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள். இந்த புகார்களை கேட்டுக் கொண்ட கிரிஷ் சோடங்கர், காங்கிரஸ் கமிட்டித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என உறுதியளித்தாராம்.
செல்வப்பெருந்தகை பிரச்சனை என்ன?
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சுதந்திரமாக செயல்படவிடாமல் டெல்லி மேலிட லாபியில் உள்ள மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட எம்பிக்கள் முட்டுக்கட்டையாக இருக்கின்றனராம். இது தொடர்பாக அண்மையில் டெல்லி சென்று மல்லிகார்ஜூன கார்கேவிடம் நேரில் முறையிட்டாராம் செல்வப்பெருந்தகை. இதனையடுத்துதான் இப்போது செல்வப்பெருந்தகை அதிருப்தியாளர்களும் டெல்லிக்கு படையெடுத்துள்ளனர் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications