லோக்சபா தேர்தல்.. மக்களே.. உங்கள் மொத்த சந்தேகங்களுக்கும் இதோ விடை! FAQ முழு விவரம்
டெல்லி: லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக வாக்காளர்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்த விளக்கங்களை இங்கே பார்க்கலாம்.
ஜனநாயக திருவிழா என வர்ணிக்கப்படும் இந்தியாவின் லோக்சபா தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 7 கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தலிலேயே தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

7 கட்டங்களாக நடைபெறும் தேர்தலில் பொதுமக்களுக்கு எழும் முக்கியமான கேள்விகளுக்கு இங்கே விடை கொடுக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
தேர்தல் நடைபெறும் தேதிகள்:
முதல் கட்டம்: ஏப்ரல் 19
2-ம் கட்டம்: ஏப்ரல் 26
3-ம் கட்டம்: மே 7
4 ஆம் கட்ட தேர்தல்: மே 13
5 ஆம் கட்ட தேர்தல்: மே 20
6-ஆம் கட்ட தேர்தல்: மே 25
7 ஆம் கட்ட தேர்தல்: ஜூன் 1
வாக்கு எண்ணிக்கை ஜூன் 04
மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை:
18-வது லோக்சபா தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர்களின் எண்ணிக்கை 96.88 கோடியாகும். 18 வயது நிரம்பிய முதல் முறையாக வாக்களிக்க பதிவு செய்துள்ள வாக்காளர்கள் எண்ணிக்கை 1.8 கோடி.
மொத்தம் எத்தனை தொகுதிகளில் தேர்தல்:
இந்தியாவில் 543 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதுபோக ஆந்திரா, அருணாசல பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டபேரவைகளுக்கும் நடைபெறுகிறது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?
வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றால் அருகில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகம் அல்லது தேசிய வாக்காளர் மையத்தை அணுகலாம். தேர்தல் ஆணைய இணையதளத்திலும் www.nvsp.in லும் பட்டியலை பரிசோதித்துக்கொள்ளலாம்.
வாக்காளர் அட்டை இல்லையென்றால்:
பட்டியலில் பெயர் இருந்து வாக்காளர் அட்டை இல்லையென்றாலும் வாக்களிக்கலாம். அரசு அளித்துள்ள புகைப்படத்துடன் கூடிய ஐடி கார்டுகளை காட்டி ஓட்டு போடலாம்.
தேர்தல் நடத்தை விதி என்றால் என்ன?: தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடன் நடத்தை விதி அமலுக்கு வந்துவிடும். பொதுமக்கள் முறையான ஆவணங்கள் இன்றி ரொக்கமாக 50 ஆயிரத்திற்கு மேல் பணம், நகைகள் ஆகியவற்றை எடுத்துச் செல்லக் கூடாது. சோதனையின் போது அப்படி ஏதேனும் சிக்கினால் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும்.
அரசு அறிவிப்புகள், அடிக்கல் நாட்டல், போன்ற எந்த நிகழ்ச்சிகளையும் புதிதாக செய்யக்கூடாது. அரசுப் பணியாளர்கள், பணியிட மாற்றம், பதவி உயர்வு போன்றவற்றைச் செய்யக்கூடாது. மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் தங்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் எதையும் செய்ய இயலாது.












Click it and Unblock the Notifications