நீட் தேர்வில் ஆள்மாறாட்டம்! டெல்லி எய்ம்ஸ் மாணவர்கள் 4 பேர் கைது! வசமாய் சிக்கிய கும்பல்! ஷாக் தகவல்
டெல்லி: மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த டெல்லி எய்ம்ஸ் கல்லூரி மாணவர்கள் 4 பேரை அதிரடியாக டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் மருத்துவம் பயில நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி மருத்துவம் படிக்க விரும்பும் மாணவ-மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய தேர்வு முகமை சார்பில் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நீட் தேர்வில் தேர்ச்சி அடைவது சிலருக்கு கடினமாக உள்ளது. இதனால் ஆள்மாறாட்டம் உள்ளிட்ட முறைகேடுகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. அந்த வகையில் தான் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக 4 பேர் கொண்ட கும்பலை டெல்லி போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
இதுதொடர்பாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் நரேஷ் பிஷ்ரோய், முதலாமாண்டு மாணவர் சஞ்சு யாதவ், மகாவீர் மற்றும் ஜிதேந்திரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் நரேஷ் பிஷ்ரோய் மற்றும் சஞ்சு யாதவ் ஆகியோர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். மகாவீர், ஜிதேந்திரா ஆகியோர் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நீட் தேர்வுக்கான இந்த ஆள்மாறாட்ட கும்பல் நரேஷ் பிஷ்ரோய் தலைமையில் செயல்பட்டு வந்துள்ளது. இவர் நீட் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வோருக்கு பதிலாக முதலாமாண்டு பயிலும் மாணவர்களை தேர்வில் பங்கேற்க வைத்து ஆள்மாறாட்டம் செய்துள்ளார்.
இதற்காக இந்த கும்பல் ஒருவரிடம் இருந்து ரூ.7 லட்சம் வரை பணம் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இத்தகைய மோசடியில் டெல்லி மட்டுமின்றி நாடு முழுவதும் இவர்கள் செய்துள்ளதாக கூறப்படுகிறது. கைதானவர்களிடம் இருந்து லேப்டாப், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக இந்த கும்பல் எத்தனை பேருக்கு பதில் ஆள்மாறாட்டம் செய்தது. இவர்களுடன் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications