₹6.85 லட்சம் கோடி லாபம்.. தங்கம் வாங்க வேண்டாம் என மோடி சொன்னதன் பின்னணி
டெல்லி: "ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாட்டுப் பயணங்களைத் தள்ளி வையுங்கள்; முடிந்தவரை வீட்டிலிருந்தே பணியாற்றுங்கள் " என்று பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோள் இப்போது நாடு முழுவதும் விவாதப் பொருளாகி உள்ளது. அப்படி தங்கம் வாங்குவதை ஓராண்டுக்கு மொத்தமாக நிறுத்தினால் இந்தியாவுக்கு 6 லட்சத்து 85 ஆயிரத்து 498 கோடி கிடைக்கும். அதாவது 72 பில்லியன் டாலர்களைச் சேமிக்கலாம். இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பெருமளவு உயரும். ஈரான் போர்ச் சூழல், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாயின் மீதான அழுத்தம் ஆகியவற்றிற்கு மத்தியில் மோடி இந்த வேண்டுகோள் வைத்துள்ளார்.
தங்கம் வாங்குவதைத் தவிர்ப்பது எப்படி இந்தியாவின் பொருளாதாரத்திற்கு உதவும் என்பது குறித்து விரிவாக பார்ப்போம். இந்தியாவின் அந்நியச் செலாவணி கணக்கு, டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகளின்படி, இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு சுமார் 690.69 பில்லியன் டாலராக இருந்து வருகிறது. பிப்ரவரியில் 728 பில்லியன் டாலராக இருந்த இது, ஏப்ரலில் நிலவிய சர்வதேச நிச்சயமற்ற தன்மையால் 691 பில்லியனாகக் குறைந்திருகிறது. 37 பில்லியன் டாலர் இரண்டு மாதங்களில் குறைந்துள்ளது. அதாவது ஈரான் அமெரிக்க போர் காரணமாக இந்திய மதிப்பில் 3 லட்சத்து 4ஆயிரத்து 714 கோடி அன்னியசெலாவணி வெறும் இரண்டு மாதத்தில் குறைந்துள்து.

நடப்பு கணக்கு பற்றாக்குறை
2026-ல் இந்தியாவின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை (CAD) 84.5 பில்லியன் டாலராக (GDP-யில் 2%) அதிகரிக்கும் என ஐஎம்எப் கணித்துள்ளது. இந்திய மதிப்பில் 8 லட்சத்து 4ஆயிரத்து 77கோடி நடப்பு கணக்கு பற்றாக்குறை உள்ளது. அதாவது , இந்தியாவுக்கு உள்ளே வரும் டாலரை விட வெளியே செல்லும் டாலர் அதிகமாக இருக்கும்.
72 பில்லியன் டாலர்
இதற்குத் தங்கம் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாக மத்திய அரசு நினைக்கிறது. ஏனெனில் 2026 நிதியாண்டில் இந்தியா சுமார் 72 பில்லியன் டாலர் ( 6 லட்சத்து 85 ஆயிரத்து 498 கோடி ) மதிப்பிலான தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 24% அதிகம். இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்கம் வாங்கும் நாடாக உள்ளது. நாம் வாங்கும் ஒவ்வொரு அவுன்ஸ் தங்கத்திற்கும் டாலரில் தான் பணம் செலுத்த வேண்டும். கச்சா எண்ணெய், தங்கம், சமையல் எண்ணெய், உரங்கள் என நான்கு பொருட்கள் மட்டுமே 240 பில்லியன் டாலருக்கும் அதிகமாக செலவு செய்கிறோம். அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 22 லட்சத்து 85 ஆயிரத்து 491 கோடி ரூபாய் இந்தியா இறக்குமதிக்காக செலவு செய்துள்ளது.
நான்கு பொருட்கள்
இதில் கச்சா எண்ணெய்க்காக 134.7 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளோம், தங்கம் வாங்க 72 பில்லியன் டாலர், சமையல் எண்ணெய் வாங்க 19.5 பில்லியன் டாலர், உரங்கள் வாங்க 14.5 பில்லியன் டாலர் செலவு செய்துள்ளோம். இந்த நான்கு பொருட்கள் மட்டும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 31.1% பங்கு வகிக்கிறது. தங்கம் மட்டுமே சுமார் 10%. அதனால்தான் இவற்றின் பயன்பாட்டைக் குறைக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
தங்கம் தேவை குறைந்தால் என்னவாகும்?
இந்தியர்கள் ஒரு வருடத்திற்குத் தங்கம் வாங்குவதைக் கடுமையாகக் குறைத்தால், இறக்குமதியில் 30-40% குறைந்தால், 20-25 பில்லியன் டாலர் மிச்சமாகும் வாய்ப்பு உள்ளது. 50% குறைந்தால், 36 பில்லியன் டாலர் மிச்சமாகும். இது கணிக்கப்பட்டுள்ள நாட்டின் மொத்தப் பற்றாக்குறையில் பாதியாகும். எளிமையாகச் சொன்னால், ஒரு வருடம் தங்கம் வாங்காமல் இருப்பது இந்தியாவின் டாலர் வெளியேற்றத்தை பில்லியன் கணக்கில் குறைக்க முடியும். கச்சா எண்ணெய் விலை பீப்பாய் 100 டாலருக்கு மேல் இருக்கும்போது, இந்தச் சேமிப்பு அவசியமான எரிபொருள் தேவைக்குப் பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,
அமெரிக்க-ஈரான் போரின் போது இது ஏன் முக்கியம்
போரினால் ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எண்ணெய் விலை உயர்ந்து, ரூபாய் மதிப்பு பலவீனமடைந்து வருகிறது. பொதுவாகப் போர் காலங்களில் மக்கள் பாதுகாப்பான முதலீடாகத் தங்கத்தை நாடுவார்கள். இதனால் இறக்குமதியும், டாலர் வெளியேற்றமும் அதிகரிக்கும். எனவே இப்போது விலையுயர்ந்த எண்ணெய் இறக்குமதி, அதிக விலையில் தங்கம் இறக்குமதி என இந்தியா இரண்டு அழுத்தங்களைச் சந்திக்கிறது. இதனால் அந்நியச் செலாவணி கையிருப்பு கடுமையாக குறையும். தங்கம் வாங்குவதைத் தவிர்த்தால் டாலருக்கான தேவை குறைந்து, ரூபாயின் மீதான அழுத்தம் குறையும் என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.














Click it and Unblock the Notifications