எல்லாம் ஓவர்.. இந்தியாவில் வரும் நாட்களில் நிலைமை மாறபோகுது.. கைவிரிக்கும் எண்ணெய் நிறுவனங்கள்
டெல்லி: இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடந்த 2 ஆண்டுகளாக உயர்த்தப்படாமல் உள்ளது. எனினும் கேஸ் விலை மட்டும் அவ்வப்போது மாற்றியமைக்கப்பட்டு வந்தது.ஆனால் பிப்ரவரி 28-ந் தேதி, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கிய பிறகு நிலைமை மாறியது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. அதேபோல் கச்சா எண்ணெய் கேஸ் ஆகியவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் விலையை உயர்த்தாததால், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள்தோறும் ரூ. 1,700 கோடி வரை இழப்பு ஏற்படுகிறதாம். எனவே பெட்ரோல், டீசல் விலை உயரும் என்கிறார்கள் எண்ணெய் நிறுவன அதிகாரிகள்.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதலை தொடங்கி இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது. இதனால் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியதால், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய், சமையல் கேஸ் வரத்து தடைப்பட்டுவிட்டது. இதனால் கச்சா எண்ணெய் விலை மற்றும் கேஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் பல ஐரோப்பிய நாடுகள் மற்றும் ஆசிய நாடுகள் பெட்ரோல், டீசல் விலையை 30 சதவீதம் வரை உயர்த்தி விட்டன. ஆனால் இந்தியாவில் மற்ற நாடுகளை போல் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.. சமையல் கேஸ் சிலிண்டர் விலை மட்டும் கடந்த மார்ச் மாதம் ரூ. 60 உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதன் விலை உயர்த்தப்படவில்லை.

அதேநேரம் வீடுகளை பாதிக்காமல் கடைகளுக்கு மட்டும் மே 1-ந் தேதி, வணிக சிலிண்டர் விலை ரூ. 990 உயர்த்தப்பட்டது. பெட்ரோல், டீசல் பழைய விலையிலேயே இன்றும் தொடர்கிறது. தற்போது உற்பத்தி செலவை விட குறைந்த விலைக்கு பெட்ரோல், டீசல், சமையல் கேஸை விற்கப்படுகிறது. இதனால் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகின்றன.
இந்த சூழலில் எண்ணெய் நிறுவனங்கள் தரப்பு அதிகாரிகள் கூறும் போது, பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் மற்றும் இந்திய எண்ணெய் கழகம் உள்ளிட்ட மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 1,600 கோடி முதல் ரூ. 1,700 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. கடந்த 10 வாரங்களில் மொத்தம் ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
கச்சா எண்ணெய் விலை 50 சதவீதம் உயர்ந்தபோதிலும், பெட்ரோல், டீசல் பழைய விலையிலேயே விற்கப்படுவதால், இந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விற்பனையில் கிடைக்கும் வருவாயைத்தான் கச்சா எண்ணெய் வாங்கவும், சுத்திகரிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. ஆனால், நஷ்டம் காரணமாக, கடன் பெற்றுத்தான் கச்சா எண்ணெய் வாங்க வேண்டி இருக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால், அதை எப்போது உயர்த்துவது, எவ்வளவு உயர்த்துவது என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று கூறினார்கள்.














Click it and Unblock the Notifications