"விவாகரத்து.." பரஸ்பர சம்மதம் இருந்தால்.. 6 மாத கட்டாய காத்திருப்பு அவசியமில்லை.. சுப்ரீம் கோர்ட்
டெல்லி: விவகாரத்துத் தொடர்பாக நடைபெற்ற வழக்கில், இரு தரப்பும் பரஸ்பர சம்மதத்துடன் விவகாரத்து பெற விரும்பினால் 6 மாத கட்டாய காத்திருப்பு தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
உலகின் மற்ற நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் விவகாரத்து என்பது குறைவாகவே இருக்கிறது. உறவுகள், குடும்பங்கள் என விவகாரத்துக் குறைவாக இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.
அதேபோல நமது நாட்டில் விவகாரத்திற்கும் சில குறிப்பிட்ட சட்டங்கள் இருக்கிறது. அதாவது விவகாரத்திற்குப் பின், கவுன்சிலிங், பிரிந்து இருக்கும் காலம் எனப் பல உள்ளன.

விவகாரத்து: இதனிடையே விவகாரத்துத் தொடர்பாக உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, சட்டப்பிரிவு 142இன் கீழ் மோசமான திருமண முறிவு என்ற அடிப்படையில் விவாகரத்து வழங்க முடியும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மேலும், இதன் கீழ் பரஸ்பர சம்மதத்தின் மூலம் விவாகரத்து பெறும் ஆறு மாத கட்டாயக் காத்திருப்பு காலத்தை நீக்கிவிடலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேநேரம் இதில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளும் இருக்கிறது.
இது குறித்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சஞ்சீவ் கண்ணா, ஏஎஸ் ஓகா, விக்ரம் நாத் மற்றும் ஜேகே மகேஸ்வரி ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த தீர்ப்பைக் கூறியது. அதேபோல தவிர்க்க முடியாது இந்த திருமண முறிவு எப்போது ஏற்படும் என்பதைத் தீர்மானிக்கக்கூடிய காரணங்களையும் வகுத்துள்ளனர்.
மேலும், பராமரிப்பு, ஜீவனாம்சம் மற்றும் குழந்தைகளின் உரிமைகள் தொடர்பாகவும் எப்படி முடிவெடுக்க வேண்டும் என்பதையும் அவர்கள் விளக்கியுள்ளனர்.

முக்கிய உத்தரவு: இந்தியாவில் விவகாரத்து பெறக் கட்டாய காத்திருப்பு காலம் இருக்கிறது. பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து கோரி விண்ணப்பிக்கும் போது, இந்து திருமணச் சட்டத்தின் 13பி பிரிவின் கீழ் கூறப்பட்டுள்ள கட்டாயக் காத்திருப்பு காலத்தை உச்ச நீதிமன்றம் 142வது பிரிவின் கீழ் தள்ளுபடி செய்ய முடியுமா என்பதுதான் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்ட கேள்வியாகும்.
குடும்பநல நீதிமன்றங்களில் நடக்கும் நீண்ட விசாரணைகளைத் தவிர்த்து நேரடியாகப் பரஸ்பர சம்மதம் இருந்தால் விவகாரத்து தர முடியுமா என்பதே வழக்காகும். இருப்பினும், விசாரணையின் போது, மீளவே முடியாத திருமண முறிவு காரணமாகத் திருமணங்களைக் கலைக்க முடியுமா என்ற பிரச்சினையைப் பரிசீலிக்க அரசியலமைப்பு பெஞ்ச் முடிவு செய்தது.

இது குறித்து நீதிமன்றம் கூறுகையில், "அதன்படி விவாகரத்து வழங்க 142வது பிரிவின் கீழ் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்த முடியும்.. இதில் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கவே செய்கிறது. அதேநேரம் பிரிவு 142 அடிப்படை உரிமைகள் கீழ் பரிசீலிக்கப்பட வேண்டும்" என்றது.
அதாவது, பரஸ்பர சம்மதம் இருந்தால் குடும்ப நல நீதிமன்றங்களுக்குச் செல்லாமல் நேரடியாக சுப்ரீம் கோர்ட்டை நாடி விவாகரத்து பெற முடியும் என்று தீர்ப்பளித்துள்ளது. இதன் மூலம் பரஸ்பர சம்மதம் இருந்தால் 6 மாத கட்டாய காத்திருப்பு காலம் தேவையில்லாமல் போகும்.
கடந்த ஏழு ஆண்டுகளாக இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இந்த தீர்ப்பு ஒருமனதாக வழங்கப்பட்டது.













Click it and Unblock the Notifications