75% உயர்சாதியினர்.. ஹைகோர்ட் நீதிபதி நியமனத்தில் 5 ஆண்டில் நடந்தது என்ன? எஸ்சி, எஸ்டியினர் எவ்வளவு?
டெல்லி: இந்தியாவில் கடந்த 5 ஆண்டில் உயர்நீதிமன்ற நீதிபதிகளாக 604 பேர் நியமனம் செய்யப்பட்ட நிலையில் 75 சதவீதம் பேர் உயர்சாதியினர் என மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். அதோடு இந்த காலத்தில் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டவர்களில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் என்பவர்கள் 5 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. மொத்தம் 17 அமர்வுகள் நடக்கிறது. இந்த அமர்வுகளின் 32 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஆனால் நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் நடந்த நாடாளுமன்ற கூட்டம் பெரும்பாலும் முடங்கிப்போனது. இதற்கு முக்கிய காரணம் என்பது மணிப்பூர் வன்முறை தான். மணிப்பூர் வன்முறை குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் கூறிய நிலையில் லோக்சபா, ராஜ்யசபா தலைவர்கள் அனுமதி மறுத்தனர்.
இதனால் லோக்சபா (மக்களவை), ராஜ்யசபா (மாநிலங்களவை) நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்டன. இதற்கிடையே லோக்சபாவில் (மக்களவையில்) எம்பிக்கள் கேட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர்கள் பதிலளித்து இருந்தனர். அதன்படி ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும் எம்பியுமான அசாதுதீன் ஓவைசி. ‛‛கடந்த 5 ஆண்டுகளில் அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் 79 சதவீதம் பேர் உயர்சாதியை சேர்ந்தவர்கள் என்பது உண்மையா?'' என கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛ கடந்த 2018ம் ஆண்டு முதல் தற்போதைய ஆண்டின் ஜூலை 17 ம் தேதி வரை உயர்நீதிமன்றங்களில் மொத்தம் 604 பேர் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 458 பேர் (75.58 சதவீதம்) பொதுப்பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர்.
மேலும் 18 பேர் (2.98 சதவீதம்) எஸ்சி பிரிவை சேர்ந்தவர்களாகவும், 9 பேர்(1.49 சதவீதம்) எஸ்டி பிரிவை சேர்ந்தவர்களாக உள்ளனர். மேலும் 72 பேர் (11.92 சதவீதம்) ஓபிசிக்களாகவும், 32 பேர் (5.6 சதவீதம்) சிறுபான்மையினராகவும் உள்ளனர்'' என தெரிவித்துள்ளார்.
மேலும் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளின் நியமனம் என்பது சாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை வழங்காத அரசியலமைப்பு பிரிவு 124, 217 மற்றும் 224 ஆகியவற்றின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பார்த்தால் கடந்த 5 ஆண்டுகளில் உயர்நீதிமன்றங்களின் நீதிபதிகளில் 75.58 சதவீதம் பேர் உயர் சாதியை சேர்ந்தவர்கள் தான் என மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
மேலும் நாட்டில் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் என்பது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலிஜியம் முடிவு செய்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யும். இந்த பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கும். இந்த முறையில் தான் நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய சூழலில் தான் ஒவ்வொரு நீதிபதிகள் நியமனத்திலும் எஸ்டி, எஸ்டி, பிற்படுத்தப்பட்டோருக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என கொலிஜியத்திடம் கூறப்பட்டுள்ளது என மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications