நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தொடங்கியது.. புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை.. பிடிஆர் பங்கேற்பு!
டெல்லியில் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம்.. புதிய கல்விக் கொள்கை குறித்து ஆலோசனை.. பிடிஆர் பங்கேற்பு!
டெல்லி: நிதி ஆயோக் அமைப்பின் 7வது நிர்வாக கவுன்சில் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
நிதி ஆயோக்கின் நிர்வாக கவுன்சில் கூட்டம் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இடையே ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பின் புதிய சகாப்தத்துக்கு வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது. ஒவ்வொரு கொள்கைக்கான செயல் திட்டத்தையும் இறுதி செய்வதற்கான முயற்சிகள் இந்த கூட்டத்தில் மேற்கொள்ளப்படும்.

புதிய கல்விக் கொள்கை
இந்த நிலையில் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டம் தொடங்கியுள்ளது. இதில் பல்வகை பயிர்களை பயிரிடுதல், எண்ணெய் வித்துகள், பருப்புகள் மற்றும் இதர விவசாய பொருட்கள் உற்பத்தியில் தன்னிறவு, தேசிய கல்விக் கொள்கை மற்றும் நகர்ப்புற நிர்வாகம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பிடிஆர் பங்கேற்பு
இந்த கூட்டத்தின் ஒரு பகுதியாக, தலைமை செயலாளர்களின் மாநாடு கடந்த ஜூன் மாதம் தர்மசாலாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய பாஜக அரசை கடுமையாக விமர்சித்து வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றுள்ளார்.

கேசிஆர் புறக்கணிப்பு
ஆனால் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் நிதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், நீதி ஆயோக் உருவானதன் நோக்கமே வலுவான மாநிலங்களால் வலுவான நாட்டை உருவாக்குவது. திட்டக்குழு இருக்கும் போது மாநில அரசுகளின் கருத்துகளுக்கு மதிப்பிருக்கும். ஆனால் நீதி ஆயோக்கில் இந்த மாதிரியான உரையாடல் எதுவும் இல்லை. உயர் பதவியில் இருக்கும் சில அரசியல்வாதிகள் புல்டோஜர்களை பயன்படுத்துகின்றனர்.

பிரதமருக்கு கடிதம்
கூட்டாட்சி அரசாங்கத்திற்கு எதிராகவே மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. வரி விதிப்புகளில் கூட மாநில அரசாங்கத்தின் கருத்துகளை கேட்பதில்லை. இது 140 கோடி இந்தியர்களுக்கு நன்மையளிக்கப் போவதில்லை என எனக்கு தோன்றுகிறது. வலுவான மாநிலங்களால் மட்டுமே வலுவான இந்தியாவை உருவாக்க முடியும்.
இதனால் ஆகஸ்ட் 7ம் தேதி நடைபெறும் நீதி ஆயோக் கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதால் எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாநில அரசுகளை மத்திய அரசுக்கு இணையாக பார்க்காமல் சிறுமைபடுத்தும் மத்திய அரசின் நிலைபாடுகளை கண்டித்து இக்கூட்டத்தில் நான் பங்கேற்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications