டிரம்ப் ஸ்டைலில் இங்கிலாந்து: இந்தியர் ஹோட்டல்களில் ரெய்டு- சட்டவிரோதமாக குடியேறிய 828 பேர் கைது!
டெல்லி: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பாணியில் இங்கிலாந்து நாடும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை கைது செய்து நாடு கடத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இங்கிலாந்தில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் சட்டவிரோதமாக குடியேறியதாக இந்தியர்கள் உட்பட 828 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்ப் மீண்டும் பதவியேற்றது முதலே உலக நாடுகளை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அதிரடியாக கைது செய்து அந்தந்த நாடுகளுக்கு நாடு கடத்தி வருகிறார் டொனால்ட் டிரம்ப். அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்கள் கை விலங்குகள் கட்டப்பட்ட நிலையில் போர் விமானத்தில் அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டது பெரும் சர்ச்சையானது. இதேபோல பல நாடுகளும் அமெரிக்கா அதிபர் டிரம்ப்பின் இந்த நடவடிக்கையால் பெரும் கொந்தளிப்பை வெளிப்படுத்தி வருகின்றன.

இந்த வரிசையில் தற்போது அதாவது டிரம்ப் பாணியில் இங்கிலாந்து நாடும் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவருக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது. இங்கிலாந்தில் ஜனவரி மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக குடியேறிய 828 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்; இவர்களில் இந்தியர்களும் அடக்கம்.
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள இந்தியருக்கு சொந்தமான உணவகத்துக்குள் நுழைந்த அந்நாட்டின் குடியேற்றத்துறை அதிகாரிகள், இந்தியர்களின் குடியேற்ற ஆவணங்களை சரிபார்த்தனர்; அப்போது முறையான ஆவணங்கள் இல்லாத 7 பேர் கைதும் செய்யப்பட்டனர்.
அமெரிக்காவைப் போல இங்கிலாந்தும் விரைவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அவர்களின் சொந்த நாடுகளுக்கு நாடு கடத்தக் கூடும்.
இதனிடையே இங்கிலாந்தில் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டு குற்றவாளிகள், சட்டவிரோதமாக குடியேறிய பொதுமக்கள் என 19,000 பேர் இதுவரை நாடு கடத்தப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ பதிவையும் இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications