ஒரு மருத்துவரின் மரணமும் ரூ.60 கோடி சொத்தும்.! வாரிசு யார் என தெரியாமல் குழம்பி நிற்கும் அரசு
டெல்லி: 81 வயதான ஹேமலதா என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது மரணம் நகரில் சத்தமே இல்லாமல் ஒரு பெரிய புயலைக் கிளப்பியுள்ளது. மேலும், அவரது ரூ.60 கோடி சொத்துக்கு யார் வாரிசு என்ற கேள்வியும் எழுந்துள்ளது. சாதாரணக் குடும்பச் சண்டையாக இல்லாமல் சட்டச் சிக்கலாகவும் மாறியிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்
மத்திய பிரதேச மாநிலத்தில் ரைட் டவுன் என்ற நகரில் உள்ள மிகவும் ஆடம்பரமான மற்றும் விலை உயர்ந்த குடியிருப்புப் பகுதியில் சத்தமே இல்லாமல் சூறாவளி ஏற்பட்டது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு பங்களாவிற்குள், 81 வயது மூத்த மருத்துவர் டாக்டர் ஹேமலதா ஸ்ரீவஸ்தவாவின் உடல் இருந்தது. அவரை சுற்றி காவலர்களும் பவுன்சர்களாலும் சூழ்ந்து நின்றனர். அவரது இறுதி ஊர்வலத்தில் உறவினர்களுக்கு நிகராக அதிகாரிகளும் காவலர்களும் கூட இருந்தனர்.

துக்க வீட்டில் கெடுபிடி
துக்க வீட்டில் இந்தளவுக்குக் கெடுபிடி இருக்க ஒரே ஒரு காரணம் தான்.. அதாவது ஹேமலதாவுக்கு வாரிசு என யாரும் இல்லை. இதனால் மரணத்திற்குப் பின் அவரது சொத்து யாருக்குப் போகும்? என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.
கடந்த ஜனவரி 12ம் தேதி டாக்டர் ஹேமலதா தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இப்போது இன்னொரு மருத்துவரும் ஹேமலதாவின் பிறந்த நாளுக்கு வந்திருந்தனர். அவரும் மகிழ்ச்சியாக கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடினார். அப்போது அவரது உடல்நிலை சீராகவே இருந்தது. ஆனால் பிறந்த நாள் முடிந்து இரண்டே நாட்களில் அவரது உடல்நலம் திடீரென மோசமடைந்ததாகக் கூறப்படுகிறது.
ரூ.60 கோடி சொத்து
ஜனவரி 15ம் தேதி, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார். அவரது பிறந்த நாளுக்கும் மருத்துவமனை அனுமதிக்கப்பட்ட தேதிக்கும் நடுவே சில முக்கிய ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டன. அதில் முக்கியமானது ரைட் டவுனில் உள்ள 11,000 சதுர அடி மதிப்புமிக்க அவரது சொத்து. அதன் சந்தை மதிப்பு சுமார் ₹60 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
டாக்டர் ஹேமலதா அந்த இடத்தில் மருத்துவமனை கட்ட விரும்பியதாகவும் இதற்காக நிலத்தை அவர் தனக்குத் தானமாக வழங்கியதாகவும் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பங்கேற்ற மருத்துவர் கூறுகிறார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நிலத்தைத் தானமாகக் கொடுக்கும் போது அவரது உடல்நிலை சீராகவே இருந்தது. அவர் எங்களுக்கு ஒரு தாயைப் போன்றவர்," என்று உருக்கமாகக் கூறுகிறார்..
ஒரு சொத்து பல கதைகள்
ஆனால் ஹேமலதாவின் கதை இத்தோடு முடியவில்லை. அது அங்கு தான் தொடங்குகிறது. இந்திய மருத்துவச் சங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டது. ஹேமலதா அச்சுறுத்தப்பட்டதாகவும் அவரது மனநிலை சீராக இல்லாத போது தானப் பத்திரங்களில் கையெழுத்திட நிர்ப்பந்திக்கப்பட்டதாக மருத்துவச் சங்கம் கூறுகிறது. ஹேமலதா உயிரோடு இருந்தபோதே இந்த சர்ச்சை எழுந்தது. அப்போதே மாவட்ட நிர்வாகம் தலையிடும் அளவுக்கு நிலைமை மோசமானது.
அப்போது தானப் பத்திரம் குறித்து தனக்குத் தவறான தகவல் அளிக்கப்பட்டதாக டாக்டர் ஹேமலதா பின்னர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், காயத்ரி மந்திர் என்ற அறக்கட்டளையும், டாக்டர் ஹேமலதா தனது முழுச் சொத்தையும் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்க விருப்பம் தெரிவித்ததாக உறுதிப்படுத்தியுள்ளது. ஹேமலதாவின் இளைய சகோதரி கனக லதா மிஸ்ரா இதை உறுதி செய்கிறார். மறுபுறம், சத்தீஸ்கரைச் சேர்ந்த அவரது இன்னொரு சகோதரியும் இந்த விவகாரத்தில் உள்ளே வருகிறார். சகோதரி சொத்தில் சட்டப்பூர்வ வாரிசு நான் என்கிறார் அவர்.. இப்படி ஒரு சொத்தை சுற்றிப் பல கதைகள் உள்ளன.
மாவட்ட ஆட்சியர் விளக்கம்
இது பெரிய சர்ச்சையாக மாறிய நிலையில், ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் ராகவேந்திர சிங் இந்தச் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ரைட் டவுன் சொத்து மாநகராட்சியின் குத்தகைதாரர் வகையைச் சேர்ந்தது என்றும், சட்டப்பூர்வமாக அதைத் தானமாக வழங்க முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். மேலும், தங்களிடம் அளித்த வாக்குமூலத்தில் சொத்தை தானமாக வழங்கியதை டாக்டர் ஹேமலதா மறுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், ஹேமலதாவுக்கு எங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது, என்ன மருந்துகள் கொடுக்கப்பட்டன, அவரது உடல்நிலை ஏன் இவ்வளவு வேகமாக மோசமடைந்தது என்பது போன்ற விவரங்கள் இன்னும் தெளிவற்றதாகவே உள்ளன. இதனால் ஹேமலதா மரணம் ஒரு மிகப் பெரிய புயலைக் கிளப்பி இருக்கிறது என்பதே உண்மை.!
ஹேமலதா ஸ்ரீவஸ்தவா
டாக்டர் ஹேமலதா ஸ்ரீவஸ்தவாவின் தனிப்பட்ட வாழ்க்கையும் சோகம் நிறைந்ததாகவே இருக்கிறது. அவரது மகன், டாக்டர் ரச்சித் ஸ்ரீவஸ்தவா, 2022இல் திடீர் மாரடைப்பால் காலமானார். அவரது கணவர் டிசம்பர் 2025இல் இறந்தார். ஒரு காலத்தில் குடும்பத்தால் சூழப்பட்டிருந்த ஹேமலதா, தனது கடைசிக் காலத்தில் ஆள் இல்லாமல் ஒரு பெரிய பங்களாவில் தனித்து விடப்பட்டார். ஜனவரி மாதம் அவரது உடல்நிலை மிகச் சிறப்பாக இருந்த நிலையில், சில வாரங்களில் அவர் உயிரிழந்ததும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications