ஆவணங்களை கிழித்து சபநாயகரை நோக்கி வீசிய ஆம் ஆத்மி எம்.பி.. கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்
டெல்லி: டெல்லி அதிகாரிகள் நியமன மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்த போது ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசிய ஆம் ஆத்மி எம்.பி சுஷில் குமார் ரின்கு கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
டெல்லி யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு ஆட்சியில் உள்ளது. டெல்லி நாட்டின் யூனியன் பிரதேசம் என்பதால் துணை நிலை ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் உள்ளது. இது தொடர்பாக துணை நிலை ஆளுநருக்கும் டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசுக்கும் இடையே பல்வேறு விவகாரங்களில் மோதல் நடைபெற்று வருகிறது.

இவ்விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்டவற்றில் அதிகாரம் உள்ளதாக தீர்ப்பு அளித்தது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் இந்த் தீர்ப்பை நீர்த்து போகச் செய்யும் வகையில் உடனடியாக மத்திய அரசு அவசர சட்டம் ஒன்றை நிறைவேற்றியது.
இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக டெல்லியில் சட்டம் கொண்டு வரும் வகையில் இன்று மக்களவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புதெரிவித்தன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனிடையே, மசோதா நிறைவேற்றப்படும் போது ஆவணங்களை கிழித்து சபாநாயகர் இருக்கை நோக்கி வீசி ஆம் ஆத்மி எம்.பி ரின்கு அமளியில் ஈடுபட்டார். இதனால், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் ஓம் பிர்லா நடவடிக்கை எடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications