நிலுவையில் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகள்.. காரணம் கொலீஜியமா? உடைத்து பேசிய நீதித்துறை "டேட்டா"
டெல்லி: நாடு முழுவதும் சுமார் 4 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இதில் 63 லட்சம் வழக்குகள் வழக்கறிஞர்கள் சேவை (கவுன்சில்) இல்லாததால் நிலுவையில் இருப்பதாக 'நேஷனல் ஜூடிசியல் டேட்டா கிரிட் (NJDG)' வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிய வந்துள்ளன.
நீதித்துறையின் கட்டமமைப்புகள் சொல்லிக்கொள்ளும் அளவு இல்லையென்றும் இதன் காரணமாக நாடு முழுவதும் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை விரைவில் 5 கோடியை எட்டிவிடும் எனவும் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ ஒரு சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். தற்போது அதன் தொடர்ச்சியாக நேஷனல் ஜூடிசியல் டேட்டா கிரிட் (NJDG) சில தகவல் வெளியிட்டுள்ளது. அதில் இந்த வழக்கு நிலுவை, அதற்கான காரணங்கள் குறித்து விரிவாக பேசப்பட்டிருக்கிறது.
வழக்கறிஞர்களின் மரணம், வழக்குகள் இழுபறியாகும்போது வழக்கறிஞர்கள் சிலருக்கு போதுமான கண்டனம் வழங்கப்படாமல் இருப்பது போன்ற காரணங்கள் வழக்குகள் தேக்கம் அதிகரித்து வருகிறது என்று NJDG கூறுகிறது. அதேபோல இலவச சட்ட சேவைகள் திறமையின்மை என பல்வேறு காரணங்களும் வழக்கு தேக்கத்திற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. மேற்குறிப்பிட்ட 63 லட்சம் வழக்குகளில் சுமார் 77.7% வழக்குகள் டெல்லி, குஜராத், கர்நாடகா, மகாராஸ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்களுடையதாகும்.

சுமை
அதேபோல இவற்றில் 78 சதவிகித வழக்குகள் கிரிமினல் வழக்குகளாகும். மீதமுள்ளவை சிவில் வழக்குகள். இவ்வாறு வழக்கு நிலுவைக்கு விசாரணை தாமதம் முக்கியமான காரணமாகும். எப்படி வழக்கறிஞர்கள் பற்றாக்குறை நிலவுகிறதோ அதேபோல நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாகவும் வழக்குகள் நிலுவைக்கு முக்கிய காரணம் என சட்ட விழிப்புணர்வு அமைப்பான 'நியாயா'வின் தலைவர் அனிஷா கோபி கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, "நீதிமன்றங்களை பொறுத்த அளவில் வழக்கறிஞர்களுக்கு சுமை அதிகம். நமது நீதிமன்றங்களில் உள்ள பதிவகம் செயல்படும் விதம் சற்று வித்தியாசமானது.

விசாரணை
வழக்கு பட்டியல்களை இந்த பதிவகம் கடைசி நிமிடத்தில் வெளியிடுவதால் வழக்கறிஞர்கள் விசாரணைகளை தவறவிட்டு விடுகின்றனர். இந்தியாவை பொறுத்த அளவில் இங்கு ஒரு வழக்கை முடிக்க குறைந்தது நான்கு ஆண்டுகளாகும். இந்த நான்கு ஆண்டுகளுக்கு சாமானியர் ஒருவர் வழக்கறிஞர் கட்டணத்தை செலுத்துவதே பெரும் சிரமம். இப்படி இருக்கையில், இந்த வழக்கு மேலும் சில ஆண்டுகள் நீடிக்கப்படும்போது கூடுதல் கட்டணத்தை அவர்களால் கொடுக்க முடியாமல் போகலாம். அரசின் சட்ட சேவைகள் குறித்து சில தகவல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 1.03 கோடி இதன் மூலம் பலனடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் இந்த தரவுகளின் நம்பகத்தன்மை குறித்து பரிசோதிக்கப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

கொலீஜியம்
நீதிமன்றங்களின் வழக்கு நிலுவை குறித்து 'கொலீஜியம்' அமைப்பை மத்திய அரசு விமர்சித்திருந்த நிலையில் தற்போது NJDG வெளியிட்டுள்ள தரவுகள் அதிக கவனம் பெற்றிருக்கின்றன. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ கூறுகையில், "நீதிபதிகள் இதர நீதிபதிகளை நியமிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். அவர்களின் சகோதரர்களை கூட சக நீதிபதிகளாக நியமித்த வரலாறு கொலீஜியத்திற்கு இருந்திருக்கிறது. எனவே நீதிபதிகள் தங்கள் பணிகளை செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். சக நீதிபதிகளை நியமிப்பதை அரசு பார்த்துக்கொள்ளும்" என்று கூறியிருந்தார்.

அதிகாரம்
தற்போது வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் குழுதான் நீதிபதிகளை பரிந்துரைக்கிறது. மத்திய அரசின் சட்ட அமைச்சகம் இந்த பரிந்துரையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற்று மீண்டும் கொலீஜியத்திற்கு அனுப்பும். தற்போது வரை நீதிபதிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசு கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications