Ajith: ஈரான்- இஸ்ரேல் போர் பதற்றம்! துபாயில் சிக்கிய நடிகர் அஜித் குமார்! எப்போது சென்னை வருவார்?
டெல்லி: கார் பந்தயங்களில் கலந்து கொள்வதற்காக துபாயில் தங்கியிருக்கும் நடிகர் அஜித் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் எப்போது சென்னை வருவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென ஏற்பட்டுள்ள போர் பதற்றம் மற்றும் வான் வழித் தாக்குதல்கள் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நடிகர் அஜித், கார் பந்தய போட்டிகளில் கலந்து கொள்ள துபாயில் சென்றுள்ளார் என தகவல் கிடைத்தது. இதனால் அவரது ரசிகர்கள் பதறினர். இந்த நிலையில் அஜித் எப்படி இருக்கிறார் என்பது குறித்து அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா விளக்கியுள்ளார்.
அவர் கூறுகையில், தற்போது துபாயில் உள்ள நடிகர் அஜித்குமார் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறார். அவருக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. இன்று சென்னை திரும்ப அவர் முன்கூட்டியே திட்டமிட்டிருந்தார். விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளதால் பாதுகாப்பான இடத்தில் தங்கியிருக்கிறார்.
துபாயில் தற்போது நிலவி வரும் அசாதாரண சூழல், விமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் சீரான பிறகு, அவர் சென்னை திரும்புவார் என சுரேஷ் சந்திரா தெரிவித்துள்ளார். இதையடுத்து அஜித் ரசிகர்கள் பாதுகாப்பாக உள்ளனர்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி வந்த அமெரிக்கா, நேற்று அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்காவுடன் இஸ்ரேலும் இணைந்து ஈரானின் முக்கிய பகுதிகள் மீது குண்டு மழை பெய்தது.
ஈரானின் தலைவர் கமேனி தங்கியிருக்கும் மாளிகை மீது இந்த தாக்குதல் நடந்தது. இதில் வான்வழித் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரானும் இதை உறுதி செய்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்து ஒரு வாரத்திற்கு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.
"உச்சத் தலைவர் கமேனியை ஏன் தொட்டோம் என அமெரிக்கா வருந்தும் அளவுக்கு பதிலடி உக்கிரமாக இருக்கும்" என ஈரான் அதிபர் பெஷேஷ்கியான் எச்சரித்துள்ளார். இதற்கு டிரம்பும் எச்சரிக்கை விடுத்துள்ளார், அவர், "கமேனி கொலைக்கு பழிவாங்குவதாக நினைத்து தாக்குதல் நடத்தினால் மிக மோசமான அழிவை சந்திக்க நேரிடும்" என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டதை அடுத்து டெல்லியில் உள்ள ஈரான் தூதரகத்தில் அந்நாட்டு தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது.












Click it and Unblock the Notifications