நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது.. தமிழ்நாட்டில் இருந்து 3 பேருக்கு மத்திய அரசு அறிவிப்பு!
டெல்லி: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கலைத்துறையில் நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷண் அறிவிக்கப்பட்டுள்ளதோடு, நடிகை சோபனா சந்திரசேகர், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. கல்வி, இலக்கியம், மருத்துவம், விளையாட்டு, சமூகப்பணி, தொழில்துறை என்று பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கும் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டு மொத்தமாக 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 19 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 113 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 23 பெண்கள் விருதுகளை பெறவுள்ளனர். அதன்படி பத்ம விபூஷண் விருது தெலங்கானவைச் சேர்ந்த மருத்துவரான நாகேஷ்வர் ரெட்டிக்கும், சண்டிகரைச் சேர்ந்த ஜக்தீஷ் சிங்கிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கலைத்துறையில் குஜராத்தைச் சேர்ந்த குமுடுனி ரஜினிகாந்த் லாகியாவுக்கும், கர்நாடகாவைச் சேர்ந்த லட்சுமி நாராயண சுப்பிரமணியம் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இலக்கியத்திற்காக கேரளாவின் வாசுதேவன் நாயருக்கும், வர்த்தகம் மற்றும் தொழில்துறையில் ஜப்பானைச் சேர்ந்த ஒசுமு சுசூகி-க்கும், பீகாரைச் சேர்ந்த சாரதா சிங்காவுக்கு கலைத்துறையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பத்ம பூஷண் விருதுகள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கலைத்துறையில் நடிகர் அஜித் குமார், நடிகை சோபனா சந்திரகுமார், தொழில் மற்றும் வர்த்தகம் துறையில் நல்லி குப்புசாமிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கும் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அஜித் குமாருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் மூலமாக இந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் இருந்து மொத்தமாக 13 பேர் பத்ம விருதுகளை பெற்றுள்ளனர். பத்மஸ்ரீ விருதுகள் ஏற்கனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பத்மபூஷண் விருதினை தமிழ்நாட்டில் இருந்து 3 பேர் பெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications