அதானி முறைகேடு.. அமலாக்கத்துறை விசாரணை கோரி 18 கட்சியினர் பேரணி.. தடுத்த போலீஸ்.. பரபரத்த டெல்லி
அதானி முறைகேடு புகார் குறித்து அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட 18 கட்சி தலைவர்கள் டெல்லியில் பேரணி சென்றனர்.
டெல்லி: அதானி விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதற்கு மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. இந்நிலையில் தான் கோரிக்கையை வலியுறுத்தி இன்று டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து அமலாக்கத்துறை அலுவலகம் வரை 18 கட்சிகளின் தலைவர்கள் பேரணி புறப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தியாவில் எதிர்க்கட்சி தலைவர்களை மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட மத்திய விசாரணை அமைப்புகள் மூலம் மிரட்டி வருவதாக எதிர்க்கட்சியினர் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தான் அதானி தொடர்பாக ஹின்டர்பர்க் அறிக்கை இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதானிக்கும் பிரதமர் மோடிக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மேலும் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் நாடாளுமன்றத்திலும் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் முடங்கின.
இந்நிலையில் தான் அதானி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி 18 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருந்து டெல்லி அமலாக்கத்துறை இயக்குனரக அலுவலகம் நோக்கி கட்சிகளின் எம்பிக்கள் பேரணியாக புறப்பட்டனர். இதையடுத்து டெல்லி போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து பேரணியை தடுத்தனர். அப்போது போலீசாருக்கும், கட்சி தலைவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் ராஜ்யசபா எம்பியுமான மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ‛‛போலீசார் எங்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். 200 பேர் பேரணி சென்ற நிலையில் 2000 காவலர்களை குவித்து எங்களை தடுத்துள்ளனர். ஜனநாயகத்தின் குரலை ஒடுக்க விரும்பும் இவர்கள் தான் ஜனநாயகத்தை பற்றி பேசுகின்றனர். விரைவில் அமலாக்கத்துறை அதிகாரியை சந்தித்து குழுவாக புகார் அளிக்க உள்ளோம்'' என்றார்.
இன்றைய பேரணியிலும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியினர் பங்கேற்கவில்லை.












Click it and Unblock the Notifications