வருகிறது “அதானி ஹெல்த் சிட்டி”.. மருத்துவத் துறையில் மயோ கிளினிக் உடன் இணைந்து கால்பதிக்கும் அதானி!
டெல்லி: மருத்துவத் துறையிலும் கால் பதிக்கிறது அதானி குழுமம். மும்பை, அகமதாபாத்தில் அதானி ஹெல்த் சிட்டி தொடங்கப்பட உள்ளது. "மயோ கிளினிக்குடன் இணைந்து அதானி ஹெல்த் சிட்டியை தொடங்குவதில் பெருமைப்படுகிறேன்" என்று அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி தெரிவித்துள்ளார்.
அதானி குழுமம், அமெரிக்காவை சேர்ந்த மயோ கிளினிக்குடன் இணைந்து மும்பை மற்றும் அகமதாபாத்தில் 1,000 படுக்கைகள் கொண்ட இரண்டு மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளை அமைப்பதற்கு ரூ.6,000 கோடியை செலவிட உள்ளது.

அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, கடந்த வாரம் தனது இளைய மகன் ஜீத் அதானியின் திருமணத்தின் போது, மக்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காக ரூ.10,000 கோடி செலவிடப்படும் என அறிவித்திருந்தார். இந்நிலையில், அதன் ஒருபகுதியாக ரூ. 6000 கோடியை இந்த சுகாதார திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய லாப நோக்கமற்ற மருத்துவ சேவை வழங்கும் நிறுவனமான மயோ கிளினிக், அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. மயோ கிளினிக் நிறுவனத்துடன் இணைந்து அதானி ஹெல்த் சிட்டி அமைக்கும் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது அதானி குழுமம்.
இது குறித்து அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உலகத் தரம் வாய்ந்த மருத்துவ ஆராய்ச்சி, குறைந்த செலவில் சுகாதாரம் மற்றும் மருத்துவக் கல்விக்கு முன்னோடியாக விளங்கும் மயோ கிளினிக்குடன் இணைந்து அதானி ஹெல்த் சிட்டியைத் தொடங்குவதில் பெருமை கொள்கிறோம்.
Proud to launch Adani Health City in partnership with Mayo Clinic, pioneering world-class medical research, affordable healthcare & education. Starting with two 1000-bed hospitals and medical colleges in Ahmedabad & Mumbai, we are on a mission to bring cutting-edge medical… pic.twitter.com/KQ6Xoql3FH
— Gautam Adani (@gautam_adani) February 10, 2025
அகமதாபாத் மற்றும் மும்பையில் இரண்டு 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் மற்றும் மருத்துவக் கல்லூரிகளுடன் தொடங்கி, இந்தியா முழுவதும் அதிநவீன மருத்துவ கண்டுபிடிப்புகளைக் கொண்டு வரும் பணியில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம். இது ஆரோக்கியமான, வலுவான இந்தியாவை கட்டமைப்பதற்கான ஆரம்பம் மட்டுமே. இந்தியாவில் சுகாதாரத் தரத்தை உயர்த்த உதவும், சிக்கலான நோய் பராமரிப்பு மற்றும் மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கும் என்று நான் நம்புகிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அதானி குழுமம், ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பையின் தாராவியை நவீன நகர மையமாக மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications