கொந்தளித்த பயணிகள்.. களேபரமான டெல்லி விமான நிலையம்.. கூடுதல் துணை ராணுவப் படையினர் அனுப்பி வைப்பு!
டெல்லி: டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கடுமையான கூட்ட நெரிசலால் பயணிகள் கொந்தளித்த நிலையில், அங்கு கூடுதலாக ஆயிரக்கணக்கான துணை ராணுவப் படையினரை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
கூட்ட நெரிசலுக்கு தீர்வு காணும் வகையிலும், பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் விதமாகவும் இந்த நடவடிக்கையை மத்திய உள்துறை அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.
தற்போது இந்த நடவடிக்கையால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் ஓரளவுக்கு சரி செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடும் கூட்ட நெரிசல்
இந்தியாவிலேயே மிக முக்கியமான விமான நிலையமாக விளங்குவது டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம். வெளிநாட்டு, உள்நாட்டு முனையங்கள் செயல்படும் இந்த விமான நிலையத்துக்கு நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்கின்றனர். ஆனால், இந்த அளவுக்கு பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்கும் வசதிகள் டெல்லி விமான நிலையத்தில் இல்லை. இதனால் நீண்டகாலமாகவே டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் ஏதோ பேருந்து நிலையம் போல கூட்ட நெரிசல் காணப்பட்டு வருகிறது.

பொறுமை இழந்த பயணிகள்
இதனிடையே, சமீபகாலமாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் கூட்ட நெரிசல் மேலும் அதிகமானது. இதுதொடர்பாக தினமும் ஆயிர்ககணக்கான பயணிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் எழுப்பி வந்தனர். ஆனால் இதற்கு தீர்வு காண எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குறிப்பாக, பயணிகளை சோதனை செய்யும் இடத்தில் பல மணிநேரமாக காத்திருக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. அதேபோல், விமானத்தில் இருந்து இறங்கி வரும் பயணிகள், தங்கள் உடைமைகளை எடுக்கும் இடத்திலும் பல மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் உருவானது. இதனால் ஒருகட்டத்துக்கு மேல் பயணிகள் பொறுமை இழந்தனர்.

போராட்டம் - வாக்குவாதம்..
இதனால் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர். பல பயணிகள் ஆங்காங்கே அமர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் விமான நிலைய நிர்வாகமும், பாதுகாப்பு அதிகாரிகளும் என்ன செய்வதென தெரியாமல் திணறினர். மேலும், டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் மக்கள் கூட்ட நெரிசலை சுட்டிக்காட்டி, "இது மீன் மார்க்கெட் அல்ல.. விமான நிலையம்" என்ற ரீதியில் நகைச்சுவை மீம்ஸ்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

கூடுதல் சிஐஎஸ்எப் வீரர்கள்
இந்நிலையில், நிலைமை கைமீறி போவதை உணர்ந்த மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சில தினங்களுக்கு முன்பு அங்கு சென்று பயணிகளுடன் பேச்சுவார்ததை நடத்தினார். இந்த சூழலில், மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தலைமையில் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது பயணிகளின் காத்திருக்கும் நேரத்தை குறைக்கும் வகையில், கூடுதலாக 1,400 சிஐஎஸ்எப் வீரர்கள் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டது. இதனால் தற்போது டெல்லி விமான நிலையத்தில் பணியில் உள்ள சிஐஎஸ்எப் வீரர்களின் எண்ணிக்கை 6,500-ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் பயணிகளின் கூட்ட நெரிசல் ஓரளவுக்கு சீராகி இருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், மும்பை, பெங்களூர் விமான நிலையங்களுக்கும் கூடுதலாக சிஐஎஸ்எப் வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications