இந்தியாவுக்கு சிக்னல் கொடுத்து பார்க்கும் தாலிபான்கள் 2.0... மத்திய அரசின் அடுத்த மூவ் என்ன?
டெல்லி: ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் இந்தியாவுடன் நல்லுறவுக்கு படுதீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தபோதும் தாலிபான்கள் விவகாரத்தில் நிலைமைகளை உன்னிப்பாக கவனித்து அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்வது என்கிற நிலைப்பாட்டில் மத்திய அரசு திட்டவட்டமாக இருப்பதாகவே தெரிகிறது.
Recommended Video
1996-2001 காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் நடத்திய கொடுங்கோலாட்சிதான் இன்னமும் அந்த நாட்டு மக்களை மட்டுமல்ல.. உலக நாடுகளையும் பெரும் அச்சத்தில் வைத்திருக்கிறது. உலக நாடுகளுக்கு சவாலாக இருந்த ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்துக்கு அடைக்கலம் கொடுத்ததும் இதே தாலிபான்கள் 1.0.
அதனால்தான் 2001-ம் ஆண்டு அமெரிக்காவின் இரட்டை கோபுரம் மீது விமான தாக்குதல்களை நடத்தி சுமார் 3,000 பேரை படுகொலை செய்தது அல்கொய்தா. அதன்பின்னர்தான் பயங்கரவாதத்தை முறியடிப்போம் என்ற சவாலுடன் ஆப்கானிஸ்தான், ஈராக் என பல நாடுகளில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் நுழைந்தன. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த நேட்டோ படைகளால் தாலிபான்களை ஒடுக்க முடியவில்லை.

தாலிபான்கள் 2.0 வசமான ஆப்கான்
இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் இருந்து நேட்டோ படைகள் வெளியேற தொடங்கின. தற்போது தாலிபான்கள் 2.0 மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளனர். அமெரிக்கா படைகளால் நவீன ஆயுதங்கள், பயிற்சிகள் கொடுக்கப்பட்ட ஆப்கான் ராணுவமோ தாலிபான்களை எதிர்க்காமல் அப்படியே சரணடைந்தன. இதனால் 2 வார காலத்துக்குள் ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமாகின. இதனையடுத்து ஆப்கானிஸ்தானில் தங்கி இருந்த வெளிநாட்டவர்கள் சொந்த நாடுகளுக்கு திரும்பினர். ஆப்கானியர்களும் தாலிபான்களுக்கு அஞ்சி பல்லாயிரக்கணக்கில் நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றனர்.

காபூல் தாக்குதல்கள்
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் முழுவதுமாக வெளியேற நாளைதான் கடைசி என தாலிபான்கள் ஏற்கனவே கெடு விதித்துள்ளனர். இதனிடையே தாலிபான்களுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ்.கே என்கிற தீவிரவாத அமைப்பு தொடர்ச்சியாக தாக்குதல்களை நடத்தி வருகிறது. காபூல் விமான நிலையம் மீதான இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல்களில் சுமார் 200 பேர் கொல்லப்பட்டனர். காபூல் மீது ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. இதனிடையே கடந்த காலங்களைப் போல அல்லாமல் தாலிபான்கள், உலக நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் மும்முரமாக உள்ளனர். அதாவது தாலிபான்கள் 2.0 என்ற வகையில் புது அவதாரம் எடுத்திருக்கின்றனர்.

தாலிபான்களின் பேச்சுவார்த்தை
ஆப்கானில் புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக பல்வேறு தரப்பினருடன் தொடர்ந்து பேச்சுவார்த்தைகளை தாலிபான்கள் நடத்தி வருகின்றனர். தாலிபான்களுக்கு சிம்மசொப்பனமாக பஞ்சசீர் மாகாணத்தில் முஜாஹிதீன்கள் இருக்கின்றனர். சோவியத் படைகளாலும் தாலிபான்களாலும் வெற்றி கொள்ள முடியாத சக்தியாக இந்த முஜாஹிதீன்கள் இருக்கின்றனர். இவர்களுடனும் மோதல் போக்கை கடைபிடிக்காமல் அமைதிப் பேச்சுவார்த்தைகளை தாலிபான்கள் நடத்தி வருகின்றனர். தாலிபான்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகள் ஏற்கனவே ஆதரவு அளித்தன. ரஷ்யாவும் கூட தாலிபான்கள் விவகாரத்தில் சாதகமான முடிவை எடுக்கலாம் என கூறப்படுகிறது. இலங்கையும் தாலிபான்களுக்கு ஆதரவு தரக் கூடும் என்றே தெரிகிறது.

இந்தியாவின் நிலை என்ன?
இந்நிலையில் தாலிபான்கள் விவகாரத்தில் இந்தியா என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்க்கின்றன. ஆப்கான் நிலவரம் தொடர்பாக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தை மத்திய அரசு அண்மையில் கூட்டியிருந்தது. இதில் பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கான் நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என கூறியிருந்தார். மேலும் தமிழகத்தின் குன்னூர் வெலிங்டன் அகாதமியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆப்கானில் மாறியிருக்கும் சூழ்நிலை இந்தியாவுக்கு சவாலானதாக உள்ளது. அதனால் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களில் இந்தியாவின் உத்திகளை மாற்றி அமைக்க வேண்டியிருக்கிறது என கூறியிருந்தார்.

இந்தியாவுக்கு சிக்னல் தரும் தாலிபான்கள்
இதனிடையே இந்தியாவின் ஆதரவை பெறுவதற்கு தாலிபான்கள் படுதீவிரமாக முயற்சித்து வருகின்றனர். அண்மையில் தோகாவில் இந்திய வெளியுறவு கொள்கை வகுப்பாளர்களுடன் அதிகாரப்பூர்வமற்ற பேச்சுவார்த்தைகளை தாலிபான்கள் நடத்தி இருந்தனர். 1982-ல் இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற ஆப்கானிஸ்தானின் முன்னாள் ராணுவ வீரரும் தாலிபான்களின் தற்போதைய அரசியல் பிரிவு தலைவருமான ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்தான் இந்த பேச்சுவார்த்தைகளை நடத்தி இருந்தார். பின்னர் இந்தியாவுடன் நல்லுறவை விரும்புவதாகவும் அவர் பகிரங்கமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் தெரிவித்தார்.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில்
அத்துடன் இந்தியா-ஆப்கானிஸ்தான் நல்லுறவின் அடையாளமாக இந்தியாவால் கட்டப்பட்ட Salma Dam- அணையையும் தாலிபான்கள் பார்வையிட்டனர். ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தையே இந்தியாதான் கட்டியும் கொடுத்தது. இருந்தபோதும் இப்போதுவரை மத்திய அரசு நிலைமைகளை கண்காணித்தபடியே இருக்கிறது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தலைவராக தற்போது இந்தியா இருந்து வருகிறது. காபூல் விமான நிலையத்தின் மீதான இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் குறித்து அறிக்கை வெளியிட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தாலிபான்கள் பெயரை குறிப்பிடாமல் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆப்கான் குழுக்கள் ஆதரவு தரக்கூடாது என மட்டும் கூறியிருந்தது. இத்தனையையும் கணக்குப் போட்டுதான் தாலிபான்கள் இந்தியாவுக்கு தொடர்ந்து சிக்னல் கொடுத்து வருகின்றனர். தாலிபான்கள் தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்பது மவுனமாகவே இருக்குமா? அல்லது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் இருக்குமா? என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications