நீட், நெட் பஞ்சாயத்தே முடியலையே.. வம்பு எதுக்கு? சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு திடீரென ஒத்திவைப்பு!
டெல்லி: நீட், யுஜிசி நெட் தேர்வுகள் தொடர்பான சர்ச்சைகளும் வழக்குகளும் முடிவுக்கு வராமல் பெரும் புயலைக் கிளப்பிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்காக வரும் ஜூன் 25 முதல் ஜூன் 27 வரை நடைபெற இருந்த சிஎஸ்ஐஆர் நெட் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசியத் தேர்வு முகமை அறிவித்திருப்பது விவாதப் பொருளாகி இருக்கிறது.
மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு மே 5-ந் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. நீட் நுழைவுத் தேர்வில் வரலாறு காணாத முறைகேடுகள் தலைவிரித்தாடின. இதனால் நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் எதிர்காலமே பெரும் கேள்விக்குறியாகிவிட்டது. பீகார், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிரான போராட்டங்களும் நாடு முழுவதும் வெடித்திருக்கின்றன. நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிரான மாநில உயர்நீதிமன்றங்களின் விசாரணைகளுக்கு தடை விதித்த உச்சநீதிமன்றம் அத்தனை வழக்குகளையும் உச்சநீதிமன்றத்துக்கு மாற்றியிருக்கிறது.

இதேபோல உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு தேசியத் தேர்வு முகமை 2 தேர்வுகளை நடத்தும். யுஜிசி நெட் தேர்வு சில நாட்களுக்கு முன்னர் நடத்தப்பட்டது. ஆனால் அந்த தேர்வில் முறைகேடுகள் நடந்ததால் மறுநாளே இத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதேபோல சில அறிவியல் பாடங்களுக்கான உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் தேர்வு வரும் 25 முதல் 27-ந் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த தேர்வையும் தேசியத் தேர்வு முகமை திடீரென ஒத்தி வைத்திருக்கிறது. எதிர்பாராத சூழ்நிலைகளால் இந்த தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசியத் தேர்வு முகமை அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications