வடகிழக்கு மாநிலங்களுக்கு சீனா குறி... போர் விமானங்கள், டிரோன்கள் குவிப்பு- பயங்கர சதிக்கு ஸ்கெட்ச்?
டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு குறிவைத்து அருணாச்சல பிரதேச எல்லையில் சீனா போர் விமானங்கள், டிரோன்களை பெருமளவு குவித்துள்ளதாக செயற்கைக்கோள் படங்களை முன்வைத்து என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் சீன ராணுவம் அத்துமீறிய சம்பவம் வடகிழக்கு மாநிலங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தவாங் செக்டாரில் சீன ராணுவத்தினர் விரட்டியடிக்கப்பட்ட போதும் சாதாரண அத்துமீறலாக இதனைப் பார்க்க முடியாது என்பது பாதுகாப்பு வல்லுநர்கள் கருத்து.

வடகிழக்கு மாநிலங்கள்
இது தொடர்பாக என்டிடிவிக்கு கிடைத்த செயற்கைக் கோள் படங்களில் திபெத்தின் முக்கிய விமான படை தளங்களில் போர் விமானங்கள், டிரோன்களை சீனா குவித்து வைத்திருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறதாம். இவை அனைத்துமே நாட்டின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்தே குவிக்கப்பட்டிருக்கின்றனவாம். அருணாச்சல பிரதேச எல்லையில் நமது போர் விமானங்கள் ரோந்து பணியில் அண்மையில் ஈடுபட்டிருந்தன. இதற்கு காரணமே சீன போர் விமானங்கள் அத்துமீறி நமது எல்லைக்குள் பறந்ததுதானாம்.

10 மணிநேரம் பறக்கும் டிரோன்கள்
அருணாச்சல பிரதேச எல்லையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் உள்ளது சீனாவின் Bangda விமான படை தளம். செயற்கைக்கோள் படங்களின் படி இடைவிடாமல் 10 மணிநேரம் தொடர்ந்து பறக்கக் கூடிய WZ-7 'Soaring Dragon டிரோன்கள் அங்கே நிலை நிறுத்தப்பட்டுள்ளனவாம். உளவு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக இந்த டிரோன்களை சீனா வடிவமைத்திருக்கிறது.

போர் விமானங்கள்
இது தொடர்பாக இந்திய ராணுவத்துக்கு டிரோன்கள் தயாரிப்பில் ஈடுபட்டிருக்கும் நிறுவன தலைவரான முன்னாள் விமான படை விமானி சமீர் ஜோஷி கூறுகையில், இந்திய நிலைகளை கண்காணிக்கவே சீனா டிரோன்களை தயாரித்துள்ளது. சீனா விமானப் படையின் ஒரு அங்கமாகவே டிரோன்கள் செயல்பட்டு வருகின்றன என்கிறார். டிசம்பர் 14-ந் தேதி Bangda விமான படை தளத்தில் போர் விமானங்கள் நிறுத்தப்பட்டிருந்த செயற்கைக் கோள் படங்கள் கிடைத்திருக்கின்றன.

2 ஆண்டுகளாக அதிகம்
பொதுவாக 2020-ம் ஆண்டு கால்வன் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் இந்திய எல்லையை ஒட்டிய பகுதிகளில் சீனா வான்படையின் செயல்பாடு மிக மிக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவின் போர் விமானங்கள், ராணுவ நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில் சீனாவின் செயல்பாடுகள் திட்டமிட்டு அதிகரிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications