அக்னிபாத்: புதிய இந்தியா நண்பர்கள் சொல்வதை மட்டும் கேட்கும்! மத்திய அரசை விமர்சித்த ராகுல்காந்தி
டெல்லி: அக்னிபாத் திட்டம் தொடர்பாக மீண்டும் ராகுல்காந்தி மத்திய பாஜக அரசை விமர்சனம் செய்துள்ளார். பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங்கின் பதிவை பகிர்ந்து, ‛‛புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படும். நாட்டின் ஹீரோக்கள் சொல்வது அல்ல'' என ராகுல்காந்தி மத்திய அரசை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்க்கும் திட்டமாக அக்னிபாத் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படையில் குறைந்தபட்சமாக 4 ஆண்டுகள் பணி செய்ய முடியும்.
இத்திட்டம் முப்படைகளில் பணியில் இணைவோரில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பி அனுப்பப்படுவர். இவர்களுக்கு ரூ.11 லட்சம் வழங்கப்படும். ஓய்வூதியம் கிடையாது.

அக்னிபாத் திட்டத்துக்கு எதிர்ப்பு
இதனால் இந்த திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பீகார், உத்தர பிரதேசம், தெலங்கானா உள்பட பல மாநிலங்களில் கடும் போராட்டங்கள் நடந்தன. சில இடங்களில் வன்முறைகள் வெடித்தன. ரயில்களுக்கு தீவைக்கப்பட்டது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக போராட்டங்கள் குறைந்துள்ளன. இருப்பினும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும் எனக்கூறி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இளைஞர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ்
இளைஞர்களுக்கு ஆதரவாகவும், அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தர்ணா நடத்தப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து அக்னிபாத் திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

பானாசிங் பதிவை பகிர்ந்து ராகுல் விமர்சனம்
இந்நிலையில் தான் அக்னிபாத் திட்டத்தை பரம்வீர் சக்ரா விருது பெற்ற கேப்டன் பானா சிங் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ‛‛நாட்டை காப்பாற்றுங்கள். அக்னிபாத் திட்டம் நம்மை மோசமாக பாதிக்கும். இந்தியா ஒரு முக்கியமான கட்டத்துக்கு செல்கிறது. இளைஞர்களே நாட்டின் எதிர்காலம்'' என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ராகுல்காந்தி பதிலளிக்கும் வகையில் பதிவிட்டுள்ளார். அதில் ராகுல்காந்தி ‛‛ஒரு பக்கம் நாட்டின் பரம்வீரும், மறுபக்கம் பிரதமரின் பெருமையும் சர்வாதிகாரமும் உள்ளது. புதிய இந்தியாவில் நண்பர்கள் சொல்வது மட்டுமே கேட்கப்படுமே தவிர, நாட்டின் ஹீரோக்கள் சொல்வது அல்ல" என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்பு ராகுல் கூறியது என்ன?
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு இந்நிலையில் இன்று ராகுல்காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் ‛‛பதவி இல்லை. ஓய்வூதியம் இல்லை. 2 ஆண்டுகளாக ஆட்சேர்ப்பும் இல்லை. அக்னிபாத் 4 ஆண்டுகளுக்கு பிறகு எதிர்காலம் இல்லை. ராணுவத்துக்கு வழங்க வேண்டிய மரியாதை இல்லை. நாட்டில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் குரலை கேளுங்கள். அவர்களை அக்னிபாத்தில் இணைத்து அவர்களின் பொறுமையுடன் அக்னி பரீட்சை செய்ய வேண்டாம் பிரதமர் அவர்களே'' என கூறியிருந்தார். அதற்கு முன்பு, ‛‛இந்தியா இரு முனைகளில் இருந்தும் அச்சுறுத்தல்களை சந்திக்கும்போது அக்னிபாத் திட்டம் நமது ஆயுதப்படைகளில் செயல்பாட்டை குறைக்கும். பாஜக அரசு நமது படைகளின் கண்ணியம், மரபு, வீரம், ஒழுக்கம் ஆகியவற்றில் சமரசம் செய்வதை நிறுத்த வேண்டும்'' என தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications