பாஜக தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு.. டெல்லி பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!
டெல்லி: பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா செயல்பட்டு வரும் நிலையில் அவரது பதவிக்காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் 2 நாட்கள் நடந்த தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. டெல்லி பாரத் மண்டபத்தில் இந்த கூட்டம் நடந்தது. பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா தலைமை வகித்தார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட பாஜக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. ஜேபி நட்டா, பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்கள் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுரைகள் வழங்கினர். இன்று 2வது நாள் பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
அப்போது அவர், ‛‛வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை வெல்ல வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும். அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானது. புதிய வாக்காளர்களை தேடிச்செல்ல வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்.
பதவியை அனுபவிப்பதற்காக இதனை நாம் செய்யவில்லை. பல தசாப்தங்களாக கிடப்பில் போடப்பட்ட பணிகளை முடித்ததன் அடையாளமாக இதனை கேட்கிறோம். இதனால் அடுத்த 100 நாட்கள் புதிய உத்வேகத்துடனும் நம்பிக்கையுடனும் பணியாற்ற வேண்டும். நாட்டு மக்களின் கனவுதான் எனது கனவு. மக்களுக்காக பகல், இரவு பாராமல் வேலை செய்து வருகிறோம். நிச்சயம் நாம் ஹாட்ரிக் வெற்றியை பெறுவோம்'' எனக்கூறி ஊக்கப்படுத்தினார்.
மேலும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது தான் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பதாகும். அதாவது பாஜக தேசிய தலைவராக ஜேபி நட்டா இருந்து வருகிறார். கடந்த 2020ல் அமித்ஷாவுக்கு அடுத்தபடியாக ஜேபி நட்டா பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார். பாஜவை பொறுத்தமட்டில் தேசிய தலைவர் பதவி காலம் என்பது 2 ஆண்டுகளாகும்.
அந்த வகையில் முதல் 2 ஆண்டு காலத்தை ஜேபி நட்டா கடந்த 2022ல் நிறைவு செய்தார். அதன்பிறகு அவர் மீண்டும் பாஜக தேசிய தலைவராக தேர்வு செய்யபப்ட்டார். இந்த பதவிக்காலம் என்பது கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அமித்ஷா ஒப்புதலுடன் அவர் அந்த பதவியில் தொடர்ந்து வந்தார்.
இந்நிலையில் தான் விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஜேபி நட்டாவின் பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்ய பாஜகவின் தேசிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி வரும் ஜேபி நட்டாவின் பாஜக தேசிய தலைவர் பதவி என்பது ஜுன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு இந்த பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் ஜேபி நட்டாவுக்கு வழங்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications