ஏர் இந்தியா விமான விபத்து.. ஒருவழியாக திறக்கப்பட்ட பிளாக் பாக்ஸ்.. வெளியாகும் சீக்ரெட்! தலையிட்ட ஐநா
டெல்லி: அகமதாபாத்தில் ஜூன் 12 அன்று நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 274 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து புலனாய்வாளர் குழு உதவி செய்ய முன்வந்த நிலையில், அதனை இந்தியா நிராகரித்துள்ளது.
நேற்று இந்த விமானத்தின் பிளாக் பாக்ஸ் முழுமையாக திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. அந்த பிளாக் பாக்ஸை ஆய்வு செய்வது இத்தனை நாட்கள் இயலாத காரியமாக இருந்தது. கருப்பு பெட்டியில் ஏற்பட்ட சேதம் காரணமாக அதை சோதனை செய்வது கடினமாக இருந்தது. நேற்று இந்த கருப்பு பெட்டி வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், விரைவில் விபத்துக்கான காரணம் தொடர்பான முடிவுகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

விசாரணைக்கு உதவ ஐ.நா முன்வந்த நிலையில் மறுத்த இந்தியா
விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டி தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக சில பாதுகாப்பு நிபுணர்கள் விமர்சித்திருந்தனர். இந்நிலையில், இந்த விபத்து குறித்து ஐ.நா புலனாய்வாளர் ஒருவர் விசாரணைக்கு உதவ முன்வந்ததை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை என்று இரண்டு முக்கிய வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தன.
போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் விமானப் போக்குவரத்து அமைப்பு (ICAO) இந்த வார தொடக்கத்தில் ஒரு அசாதாரண நடவடிக்கையாக, தனது புலனாய்வாளர்களில் ஒருவரை இந்தியாவுக்கு அனுப்பி உதவி செய்ய முன்வந்தது.
முன்னதாக, மலேசிய விமானம் 2014-ல் காணாமல் போன போதும், உக்ரைன் ஜெட் விமானம் 2020-ல் விபத்துக்குள்ளானபோதும் இதுபோன்று விசாரணைக்கு உதவ ஐ.நா முன்வந்தது. ஆனால், அந்த நேரங்களில் உதவி கோரப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் இருந்த ஐ.நா புலனாய்வாளருக்கு பார்வையாளர் அந்தஸ்து வழங்க ஐ.சி.ஏ.ஓ கேட்டுக் கொண்டது. ஆனால், இந்திய அதிகாரிகள் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த விபத்து தொடர்பாக கருத்து ஏதும் தெரிவிக்க இந்திய விமான விபத்து விசாரணைப் பணியகம் மறுத்துவிட்டது. மேலும், ஐ.சி.ஏ.ஓவிடமும் உடனடியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை.
விபத்து நடந்து சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து தரவுகள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் நேற்று தெரிவித்தது. முன்னதாக, ஜூன் 13 அன்று கருப்புப் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டும், ஜூன் 16 அன்று இரண்டாவது ஆடியோ ரெக்கார்டர் பெட்டி கண்டுபிடிக்கப்பட்டும் கூட அதில் ஏற்பட்ட சேதங்கள் காரணங்கள் முடிவுகள் வெளியாகாமல் இருந்தது.
அந்தப் பெட்டிகள் இந்தியாவில் வைத்து ஆராயப்படுமா அல்லது அமெரிக்காவில் வைத்து ஆராயப்படுமா என்ற கேள்வியும் எழுப்பப்பட்டது. ஏனெனில், அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விசாரணையில் பங்கேற்கிறது.
சர்வதேச விதிமுறைகளின்படி, விமானப் பதிவுக் கருவிகளை எங்கு வைத்துப் ஆராய்வது என்ற முடிவை உடனடியாக எடுக்க வேண்டும். ஏனெனில், இதன் மூலம் பெறப்படும் சான்றுகள் எதிர்காலத்தில் நிகழக்கூடிய விபரீதங்களைத் தடுக்க உதவும். இந்த விதிமுறை "Annex 13" என்று சட்டரீதியாக அழைக்கப்படுகிறது.
பெரும்பாலான விமான விபத்துக்கள் பல காரணிகளால் ஏற்படுகின்றன. விபத்து நடந்த 30 நாட்களுக்குப் பிறகு ஆரம்பகட்ட அறிக்கை வெளியாவது வழக்கம் என்பதால் அடுத்த வாரம் இந்த விமான விபத்து தொடர்பான முடிவுகள் வெளியாகலாம் என்று தகவல்கள் வருகின்றன.












Click it and Unblock the Notifications