தீவிர ஆர்எஸ்எஸ்காரர்.. முன்னாள் முதல்வர்.. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த விஜய் ரூபானி.. யார்?
அகமதாபாத்: குஜராத்தின் முன்னாள் முதலமைச்சரான விஜய் ரூபானி இன்று விபத்துக்கு உள்ளான அகமதாபாத் ஏர் இந்தியா விமானத்தில் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அகமதாபாத் ஏர் இந்தியா விமானம் விபத்தான இடத்தில் சிலர் மீட்கப்பட்டு உள்ளனர். ஆனால் யாரும் அடையாளம் காணப்படவில்லை. தீவிர ஆர்எஸ்எஸ், பாஜக நிர்வாகியான குஜராத்தின் முன்னாள் முதலமைச்சருமான விஜய் ரூபானியின் நிலை என்ன? என்பது குறித்த தீவிர விசாரணைகள் நடந்து வருகின்றன. ஜெயின் பனியா சமூகத்தைச் சேர்ந்தவரும், குஜராத்தின் முன்னாள் முதலமைச்சருமான விஜய் ரூபானி, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவுடன் நெருங்கிய தொடர்பும் கொண்டவர். மாணவர் பருவத்தில் ஏபிவிபி மற்றும் ஜன சங்கத்தில் இருந்த காலத்திலிருந்தே சிறந்த நிர்வாகியாகவும் அறியப்படுகிறார்.
விஜய் ரூபானியின் ஆரம்ப வாழ்க்கை
1956-ல் ரங்கூனில் பிறந்து ராஜ்கோட்டில் வளர்ந்த ரூபானி, பங்குச் சந்தை தரகராகவும், தனது தந்தையின் வணிக நிறுவனமான ராசிக்லால் & சன்ஸ் நிறுவனத்தில் பங்குதாரராகவும் தனது எளிய வாழ்க்கையைத் தொடங்கினார்.

அரசியல் வாழ்க்கை
1970களில் ஏபிவிபி மற்றும் ஆர்எஸ்எஸ் மூலம் அரசியலில் நுழைந்த ரூபானி, ராஜ்கோட் மாநகராட்சி அரசியலில் ஒரு முக்கிய நபராக உருவெடுத்தார். 1987-ல் மாநகராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1988 முதல் 1996 வரை நகராட்சி நிலைக்குழுவின் தலைவராக இருந்தார், மேலும் 1996-97ல் மேயராகவும் பணியாற்றினார்.
பாஜகவின் குஜராத் பிரிவின் தலைவராக நான்கு முறை பதவி வகித்ததுடன், சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் நகராட்சி நிதி வாரியத்திலும் முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார்.
குஜராத் முதலமைச்சராக விஜய் ரூபானி
2016 முதல் 2021 வரை குஜராத் முதல்வராக இருந்த ரூபானி, பாடிதார் சமூகத்தின் போராட்டத்தைக் கட்டுப்படுத்தி, அனைத்து சாதியினரிடமும் கட்சி ஒற்றுமையைப் பேணியதில் முக்கியப் பங்காற்றினார். தனது சாதி சார்பற்ற ஜெயின்-பனியா பின்னணியை வைத்து சௌராஷ்டிரா பகுதியில் அரசியல் ஸ்திரத்தன்மையை நிலை நாட்டினார்.
மேலும், ராஜ்கோட்டை ஒரு தொழில் மையமாக உருவாக்க முயற்சிகள் மேற்கொண்டார். இதன் மூலம் பொருளாதார உறவுகளை வலுப்படுத்தி, தனது சொந்தப் பிராந்தியத்தில் கட்சியின் செல்வாக்கை நிலை நாட்டினார். விஜய் ரூபானி, தனது அரசியல் மற்றும் நிர்வாகத் திறமையால் குஜராத் அரசியலில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்தார்.
விஜய் ரூபானி பயணம்
அகமதாபாத்தில் விபத்துக்கு உள்ளான ஏர் இந்தியா விமானத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் விமானத்தின் 12வது பயணி ஆவார். விபத்தால் ஏற்பட்ட அசம்பாவிதம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
அகமதாபாத் விமான நிலையத்திற்கு அருகே ஏர் இந்தியா விமானம் ஒன்று டேக் ஆப் செய்த சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்து இன்று மதியம் நடந்தது.
போயிங் 787-8 டிரீம்லைனர் ரக விமானமான இதில், 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். விபத்து குறித்து மேலும் விவரங்கள் வெளியாகவில்லை. இந்த நிலையில், அப்பகுதியில் இருந்து வெளியான காட்சிகளில் கரும் புகை சூழ்ந்து காணப்பட்டது.
விபத்துக்கு உள்ளான விமானம் ஏர் இந்தியா 171 என அடையாளம் காணப்பட்டுள்ளது. இது அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டனில் உள்ள கேட்விக் விமான நிலையத்திற்கு மதியம் 1:10 மணிக்கு செல்லக்கூடிய விமானமாகும்.












Click it and Unblock the Notifications